ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Thursday, 03 October 2013 08:44 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினமணி           03.10.2013

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

யானைக்கல், வடக்குமாசி வீதி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழக்கடைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சியினர் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.

மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த  யானைக்கல், வடக்குமாசி வீதி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பழக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன.

இதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை உதவி ஆணையாளர்கள் அ.தேவதாஸ், சின்னம்மாள் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்த 50க்கும் மேற்பட்ட பழக்கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன. நடைபாதைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த மூன்று சக்கர சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டு மாநகராட்சி வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டன.   யானைக்கல் பகுதியிலிருந்த சாலையோர கோயிலும் அகறறப்பட்டது. இப்பணியை மாநகராட்சி ஆணையாளர் ஆர்.நந்தகோபால் ஆய்வு செய்தார்.

அப்போது சில பழக்கடைக்காரர்கள் மாநகராட்சியில் அனுமதி பெற்றிருப்பதாக முறையிட்டனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆணையாளர், யானைக்கல் பகுதியில் மாநகராட்சி ஆணைபெறப்பட்டு நடத்தப்படும் கடைகளுக்கு மாற்று இடம் கொடுத்து, அந்தக்கடைகளையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டதுடன், வாரம் ஒருமுறை இப்பகுதிகளில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகள் மீண்டும் ஏற்படாதவாறு கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவிட்டார்.

உதவி நகரமைப்பு அலுவலர்கள் நாராயணன், முத்துக்குமார், பிஆர்ஓ சித்திரவேல் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.