பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் சேலம் புதிய பஸ்நிலையத்தில் 38 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Monday, 28 October 2013 00:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினத்தந்தி            28.10.2013

பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் சேலம் புதிய பஸ்நிலையத்தில் 38 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

சேலம் புதிய பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்திற்கும், பயணிகளுக்கும் இடையூராக இருந்த 38 நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அப்புறப்படுத்தி அகற்றினர்.

பயணிகளுக்கு இடையூறு

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினமும் 200–க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் புதிய பஸ்நிலையத்தில் காலை, மற்றும் இரவு நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனிடையே, சேலம் புதிய பஸ் நிலையத்திற்குள் மாநகராட்சி அனுமதியில்லாமல் நடைபாதை ஓரத்தில் செயல்படும் பழக்கடைகள், செருப்பு கடைகள், வளையல் கடைகள், செல்போன் ரீ சார்ஜ் கூப்பன் கடைகளால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக சிலர் கடைகளை வைத்திருப்பதாகவும் மாநகராட்சி ஆணையாளர் அசோகனுக்கு புகார்கள் சென்றது.

நடைபாதை கடைகள் அகற்றம்

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சூரமங்கலம் மண்டல உதவி ஆணையர் ரமேஷ் பாபு மேற்பார்வையில் உதவி ஆணையர் (வருவாய்) ராஜா, நகர்நல அலுவலர் டாக்டர் அர்ஜூன்குமார், உதவி செயற்பொறியாளர் மோகன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நேற்று மதியம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து அங்கிருந்த நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர். போக்குவரத்திற்கும், பயணிகளுக்கும் இடையூராக வைக்கப்பட்டிருந்த பழக்கடை, கூல்டிரிங்ஸ் கடை, பூக்கடை, செருப்பு கடை என மொத்தம் 38 நடைபாதை கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டது. அதேசமயம் பஸ் நிலையத்திற்குள் அனுமதி பெற்று நடத்திவரும் சில கடைகளில் முன்புறம் ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களையும் துப்புரவு பணியாளர்கள் எடுக்கும்படி கூறி அகற்றினர்.

நடவடிக்கை பாயும்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி அனுமதியின்றி கடைகளை வைத்து நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம் போக்குவரத்திற்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வந்த புகாரை தொடர்ந்து தற்போது நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினோம், என்றனர்.