புதிய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Tuesday, 29 October 2013 09:36 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினகரன்           29.10.2013

புதிய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சேலம், :சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று அதிரடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி பழக்கடை, செருப்பு கடை, பூக்கடை போன்றவை 50க்கும் அதிகமாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோகனுக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

ஆனாலும் நேற்று முன்தினம் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் வந்தன. அதில் ஒரு செருப்பு கடைக்காரர் நேற்று காலை ஐடிஐ மாணவரை தாக்கினார். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் சென்றதும், நேற்று மதியம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

உதவி கமிஷனர்கள் ராஜா, ரமேஷ்பாபு தலைமையில் உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி வருவாய் அலுவலர் கணேசன் மற்றும் 25 ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வாகனங்களில் ஏற்றினர். இதில், பிளாட்பாரத்தில் இருந்த செருப்பு கடை, பழக்கடை, கரும்பு ஜூஸ் கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அகற்றப்பட்டன. மாநகராட்சி சார்பில் பாதுகாப்பிற்காக போலீசாரை அழைத்திருந்தும், ஒரு போலீசார் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.