வேலூர் பழைய புறவழிச் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

Wednesday, 27 November 2013 07:45 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினத்தந்தி           27.11.2013

வேலூர் பழைய புறவழிச் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர் பழைய புறவழிச் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று அகற்றினார்கள்.

போக்குவரத்து மாற்றம்

வேலூர் நகரில் பாதாள சாக்கடை பணிக்காக தற்போது நேஷனல் தியேட்டர் முதல் மக்கான் வரை பாதை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூரில் இருந்து காட்பாடி, சத்துவாச்சாரி, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் மக்கான், பழைய புறவழிச் சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.

பழைய புறவழிச் சாலையில் இருபக்கமும் மோட்டார் வாகன பணிமனைகள் உள்ளன. இதனால் சாலையிலேயே லாரி, வேன் போன்ற வாகனங்களை நிறுத்தி பழுதுபார்த்து வருகின்றனர். இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்த நிலையில் கலெக்டர் நந்தகோபால் உத்தரவின்படி மாநகராட்சி பொறியாளர் பாஸ்கரன் தலைமையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் கண்ணன், நகர்நல அலுவலர் வசந்த்திவாகர், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் புறவழிச் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

இந்த சாலையில் தேங்கி கிடந்த தண்ணீரை பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கொட்டி சரிசெய்தனர். மேலும் டயர், குப்பைகள், தேவையில்லாத பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் பாஸ்கரன் கூறியதாவது:–

சாலையிலேயே வாகனங்கள்

தற்போது பாதாள சாக்கடை பணிக்காக காட்பாடி சாலை மூடப்பட்டுள்ளது. பழைய புறவழிச் சாலையில் 80 அடி அகலமான சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. விரைவில் இந்த சாலையில் நடுவில் தடுப்புகள் (டிவைடர்) வைக்கப்படும். மேலும் இங்கு பழைய டயர்கள், மழை காரணமாக மழைநீர் ஆகியவை தேங்கி உள்ளன. அவை சீரமைக்கப்பட்டு டயர்கள் அகற்றப்படுகிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அபராதம்

இந்த சாலையில் தற்போது மீண்டும் வாகனங்கள் நிறுத்தினால் உடனடி அபராதம் (ஸ்பாட் பைன்) வசூலிக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.