20 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பயணிகள் நிம்மதி

Friday, 29 November 2013 08:48 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினமணி             29.11.2013

20 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பயணிகள் நிம்மதி

பவானி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாள் முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் தற்போது அகற்றப்பட்டுள்ளதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பவானி பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் பெங்களூர், கோவை, சென்னை, வேளாங்கன்னி உள்பட பல்வேறு ஊர்களுக்கும் செல்ல 300-க்கும் அதிகமான பேருந்துகளும், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள், கூலித் தொழிலாளர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்து செல்வர்.

பேருந்து நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு முன்பாக அடுக்கி வைக்கப்பட்ட பொருள்களின் ஆக்கிரமிப்பால் பேருந்துக்கு வரும் பயணிகள் நடக்கக் கூட முடியாத நிலை இருந்தது. கடைக்காரர்களின் எல்லைமீறிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில், கோபி சார் ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி, திடீரென ஆய்வு செய்தபோது பயணிகள் பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர். பல இடங்களில் அடிப்படைத் தேவைகள் குறித்து விசாரித்த சார் ஆட்சியர், உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

இதனால், அரசியல் தலையீடுகளைத் தாண்டி பவானி நகராட்சி அதிகாரிகள் களமிறங்கினர். பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டன. காலையில் வெளியூர் சென்றுவிட்டு மாலையில் பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு வேறெங்காவது வந்து இறங்கிவிட்டோமா என்று சந்தேகப்படும் அளவுக்கு அதிகாரிகளின் நடவடிக்கை அமைந்திருந்தது.

இந்த அதிரடி ஆக்கிரமிப்பு அகற்றத்தால் மின்சாரம் தாக்கியதுபோன்று அதிர்ச்சிக்குள்ளான கடைக்காரர்கள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கடைகளின் கதவுகளையே இப்போதுதான் பார்த்ததாக வேதனையுடன் தெரிவித்தனர். ஒதுக்கப்பட்ட கடைக்குள் மட்டுமே பொருள்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் எனவும், வெளியே வைத்தால் உரிமையாளர்களுக்கு பொருள்கள் சொந்தமாக இருக்காது எனவும் நகராட்சி அலுவலர்கள் எச்சரித்து சென்றுள்ளனர்.

20 ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர போதுமான இருக்கைகள் ஏற்படுத்துவதோடு, மேற்கூரையில் படிந்துள்ள குப்பைகளை அகற்றி, அனைத்து பகுதிகளுக்கும் வெள்ளையடித்து சுத்தப்படுத்த வேண்டும் என்று பயணிகளும், பேருந்து ஓட்டுநர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.