பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்! நாமக்கல் நகராட்சி நிர்வாகம் அதிரடி "ஆக்க்ஷன்'

Thursday, 20 November 2014 06:06 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print
தினமணி      19.11.2014

பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்! நாமக்கல் நகராட்சி நிர்வாகம் அதிரடி "ஆக்க்ஷன்'

நாமக்கல் : பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சிறு கடை மற்றும் தள்ளுவண்டிகளை, நகராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக அகற்றினர்.

நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மப்சல் மற்றும் டவுன் பஸ்கள் நுழைந்து செல்கின்றன. இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான, 150 கடைகள் ஏலம் விடப்பட்டு, அவற்றின் மூலம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.அதன் மூலம் நகராட்சிக்கு கணிசமான வருவாய் வந்து கொண்டிருக்கிறது. கடை உரிமையாளர்கள், மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தங்களது கடையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பஸ் ஸ்டாண்டுக்குள் சென்னை, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், நாகர்கோயில், திருச்செந்தூர், ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் வந்தும், இங்கிருந்து சென்றும் வருகிறது.நகராட்சிக்கு சொந்தமான ஒரு சில கடைகள், தங்களது எல்லையை தாண்டி வரண்டாவை ஆக்கிரமிப்பு செய்து கடையை நடத்தி வருகின்றனர். அதேபோல், சிறு வியாபாரிகளும், நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து கடை விரித்துள்ளனர். மேலும், தள்ளுவண்டி கடைகள், ஆங்காங்கே நிறுத்தி பழ வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள போர்டிக்கோவை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பயணிகள், பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில், கைக்குழந்தையுடன் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பலரும், வெயிலில் நிற்கும் அவலம் ஏற்படுகிறது.அவ்வப்போது நகராட்சி சார்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதை தொடர்ந்து, ஒரு சில நாட்கள் மட்டுமே எந்தவித தொந்தரவும் இல்லாமல் மக்கள் பயணம் செய்வர். மீண்டும் தங்களது பழைய நிலையை தள்ளுவண்டி, தட்டுக்கூடை வியாபாரிகள் துவங்கி பயணிகளுக்கு தொல்லை கொடுக்க துவங்கி விடுகின்றனர்.இது குறித்து பல்வேறு புகார்கள், நகராட்சி நிர்வாகத்துக்கு சென்றது. அதை தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில், சுகாதார அலுவலர் சண்முகவேல், ஆய்வாளர்கள் பேச்சுமுத்து, உதயகுமார் மற்றும் துப்புரவு பணியாளர்கள், நேற்று மாலை, பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அதிரடியாக அகற்றினர்.தள்ளுவண்டி, தட்டுக்கூடை, பழங்கள் உள்ளிட்டவற்றை நகராட்சி லாரியில் அள்ளி எடுத்துச் சென்றனர். பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதை தொடர்ந்து, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இச்சம்பவம், நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.