ஆக்கிரமிப்பில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை... கண்டுபிடி! கள ஆய்வுக்கு கிளம்புகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்

Thursday, 27 April 2017 00:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினமலர்          27.04.2017

ஆக்கிரமிப்பில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை... கண்டுபிடி! கள ஆய்வுக்கு கிளம்புகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்


சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில், பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பல திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள இந்த நிலங்களை, கள ஆய்வு செய்து கண்டுபிடிக்க, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை மாநகராட்சி, 2011ல், ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள், 25 ஊராட்சிகளை சேர்த்து, 426 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சி, 15

மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.

கபளீகரம்

விரிவாக்கப் பகுதிகளை மட்டும் உள்ளடக்கி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய எட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. மாநகராட்சியுடன் இந்த பகுதிகள் இணைக்கப்பட்ட போது, அடிப்படை பணியாளர்கள், அரசுக்கு சொந்தமான ஆவணங்கள், பிறப்பு, இறப்பு பதிவுகள் என, அனைத்து ஆவணங்களும், மாநகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டன.

ஆனால், முக்கிய ஆவணங்களில், பல வகைகள் இன்னும் மாநகராட்சி வசம், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஒப்படைக்காமல் உள்ளன. இவற்றில், அரசியல்வாதி களால் கபளீகரம் செய்யப்பட்டு வரும் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களும் ஒன்று. விரிவாக்கப் பகுதிகளில், பல புதிய மனைப்பிரிவுகளுக்கான திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள், இன்னும் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.

மெத்தனம்

பழைய மனைப்பிரிவுகளுக்கு கூட, திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களுக்கான உரிய ஆவணங்கள், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை. பொதுநல சங்கங்களிடம் இருந்து, 'எங்கள் பகுதி திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது' என, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தற்போதைய மாநகராட்சி சிறப்பு அதிகாரியும், கமிஷனருமான கார்த்திகேயன், விரிவாக்கப் பகுதி திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை, கள ஆய்வு செய்து கண்டுபிடிக்க, மண்டல அளவில் ஊழியர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இம்மாத இறுதிக்குள், மண்டல வாரியாக, திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களின் பட்டியல், சி.எம்.டி.ஏ., அளித்த நிலம், மாநகராட்சியிடம் உள்ள நிலம், நிலத்தின் தற்போதைய நிலை ஆகிய விபரங்களை அளிக்க உத்தரவிட்டு உள்ளார்.மொத்தம், 388 திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள், இதுவரை அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், இதில் இரு மண்டலங்களில் இருந்து மட்டும், முழு தகவல்கள், மாநகராட்சி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மற்ற மண்டலங்களில், இது குறித்த விபரங்களை சேகரிப்பதில், ஊழியர்கள் மெத்தனம் காட்டி வருவதாக தெரிகிறது.

ஒத்துழைப்பு இல்லை

குறிப்பாக, பூங்கா துறை ஊழியர்கள், வார்டு பொறியாளர்களுடன் இணைந்து, திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை கள ஆய்வு செய்ய, கமிஷனர் அறிவுறுத்தினார். வார்டு பொறியாளர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், பூங்கா துறை ஊழியர்கள், நிலங்களை சென்று பார்க்க முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், முழுமையான பட்டியல் சேகரித்த பின், ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும், ஆக்கிரமிப்பு இல்லாத இடங்களை, சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்கவும், புதிய பூங்காக்கள் நிதி ஆதாரங்களை பொறுத்து அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆவணங்களை காக்க புதிய வியூகம்!

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும், திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களும் சர்ச்சைக்குள்ளாவதற்கு காரணமே, அது குறித்த ஆவணங்களை பாதுகாக்காமல், மாநகராட்சி தொலைத்துவிடுவதே ஆகும். பழைய சொத்துகளுக்கான பல ஆவணங்கள், நிலம் மற்றும் உடமை துறையில் இல்லை.இதனால், தற்போது புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, புதிதாக பெறப்படும் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களுக்கான ஆவணம், மண்டல அலுவலகம், நிலம் மற்றும் உடமை துறை, பூங்கா துறை உட்பட, நான்கு இடங்களில் பராமரிக்கப்படும்.