புதிய தலைமைச் செயலகத்தில் 6 மாடி கார் பார்க்கிங் வசதி 600 கார்களை நிறுத்தலாம்

Tuesday, 25 May 2010 10:34 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print

தினகரன்       25.05.2010

புதிய தலைமைச் செயலகத்தில் 6 மாடி கார் பார்க்கிங் வசதி 600 கார்களை நிறுத்தலாம்

சென்னை, மே 25: புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தில் 6 மாடி கார் பார்க்கிங் அமைக்கப்படுகிறது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை வளாக கட்டிடப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இதன் அருகே, தலைமைச் செயலக கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 7 பிளாக்குகள் கொண்ட 7 மாடி பிரமாண்ட கட்டிடங்கள் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது கோட்டையில் இயங்கி வரும் அரசு துறை செயலாளர் அலுவலகங்கள், புதிய 7 மாடி கட்டிடத்தில் இடம் பெற உள்ளன. இந்த வளாகங்களுக்கான குடிநீர் இணைப்பு, கழிவு நீர் கால்வாய், மின்சார இணைப்புக்கான பணிகள் முடிவடைந்து விட்டன.

புதிய சட்டமன்ற தலைமை செயலகத்துக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்காக 6 மாடியில் 600 கார்கள் நிறுத்தும் வகையில் பிரமாண்டமான கார் பார்க்கிங் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. தலைமை செயலக வளாகம் அருகே கலைவாணர் அரங்கம் அமைக்கப்படுகிறது. இது தவிர விருந்தினர் இல்லமும் கட்டப்பட உள்ளது. இந்நிலையில், அரசினர் தோட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தமிழ்நாடு தேர்வாணைய அலுவலக கட்டிடத்தை இடிக்க அரசு முடிவு செய்துள்ளது. தேர்வாணைய அலுவலகம் அமைப்பதற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இடம் தேர்வானதும் தேர்வாணைய கட்டிடம் இடிக்கப்பட்டு விடும். தற்போதுள்ள சுற்றுலா வளாக கட்டிடத்தை இடிக்காமல் தோற்றத்தை நவீனப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.