ஊழல் செய்யும் ஊழியர்களுக்கு "டிஸ்மிஸ்' என்பதே மிகவும் சரி

Friday, 28 May 2010 11:31 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print

தினமலர் 28.05.2010

ஊழல் செய்யும் ஊழியர்களுக்கு "டிஸ்மிஸ்' என்பதே மிகவும் சரி

புதுடில்லி:ஊழல் செய்யும் அரசு ஊழியர்களை வேலையிலிருந்து "டிஸ்மிஸ்' செய்வது தான் சரியான தண்டனை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.உத்தரகண்ட் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்தவர் சுரேஷ் சந்த் சர்மா. ஹரித்துவார் - ரிஷிகேஷ் தடத்தில் செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய சுரேஷ், பயணிகளிடம் கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொண்டு டிக்கெட் தராமல் முறைகேடு செய்து வந்தார். இது குறித்து பல முறை போக்குவரத்துக் கழகத்துக்கு புகார் சென்றது.கடந்த 87ல், இந்த புகார் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பப்பட்டார். மீண்டும் 88ம் ஆண்டு மே மாதம் திடீர் சோதனையின் போது, அவர் பல பயணிகளுக்கு டிக்கெட் தராமல் கட்டணத்தை வசூலித்து, தன் சொந்த செலவில் வைத்துக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷ், பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து அவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட் சுரேஷின் டிஸ்மிசை நியாயப்படுத்தியது. இதை எதிர்த்து அவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். "ஒரு சிறு தொகையை கையாடல் செய்ததற்காக பணியிலிருந்து நீக்குவது மிகப்பெரிய தண்டனை' என சுரேஷ் தெரிவித்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் சுதந்திரகுமார் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், "நம்பி ஒப்படைத்த பணத்தை கையாடல் செய்தது தவறு. அந்த தொகை சிறியதாகவும் இருக்கலாம்; பெரியதாகவும் இருக்கலாம். அரசு ஊழியர்கள் செய்யும் ஊழலுக்கு, அவர்களை பணியிலிருந்து நீக்குவது ஒன்று தான் சரியான தண்டனை' என கூறி தீர்ப்பளித்தனர். ஐகோர்ட்டின் தீர்ப்பையும் அவர்கள் உறுதிபடுத்தினர்.