மதுரை?மாநகராட்சி?ஆணையராக நந்தகோபால்?நீடிப்பதில்?சிக்கல்?

Tuesday, 05 March 2013 11:33 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print
தினகரன்         05.03.2013

மதுரை?மாநகராட்சி?ஆணையராக நந்தகோபால்?நீடிப்பதில்?சிக்கல்?


மதுரை: மதுரை மாநகராட்சி ஆணையர் நந்தகோபாலுக்கு அளிக்கப்பட்ட ஐஏஎஸ் அந்தஸ்தை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளதால், அவர் ஆணையராக நீடிக்க முடியுமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.  

தமிழகத்தில் சர்வீஸ் அடிப்படையில் 7அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அளிக்கப்பட்டதை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அதிகாரி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதில் 7பேருக்கும் ஐஏஎஸ் அளித்ததை ரத்து செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த 7பேரில் ஒருவர் மதுரை மாநகராட்சி ஆணையர் நந்தகோபால்.

மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு 2012 ஜனவரி முதல் மே வரை ஆணையர் நியமிக்கப்படாமல், பொறுப்பு அதிகாரி இருந்தார். 100 வார்டுகளாக இருப்பதால் ஐஏஎஸ் அதிகாரியை ஆணையராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
அப்போது டிஆர்ஓ அந்தஸ்தில் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை தனி அதிகாரியாக இருந்த நந்தகோபாலுக்கு ஐஏஎஸ் கிடைத்ததும், மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். மாநகராட்சியில் 13 ஆண்டுகளாக புதிய ஊழியர் நியமிக்க முடியாமல் இருந்த சிக்கலை நீக்கி புதிய ஊழியர் நியமனத்திற்கு வழி ஏற்படுத்தினார்.

இதேபோல், மாநகராட்சியில் முறைகேடாக சுருட்டிய ரூ.1 கோடி பணத்தை மீட்டு நடவடிக்கை எடுத்தது, 5ஆண்டுகளாக மூடிக் கிடந்த ராணிமங்கம்மாள் சத்திரத்தை திறந்தது, மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ்ஸ்டாண்ட் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  

முக்கியமாக வரும் 11ம் தேதி மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் ராஜன்செல்லப்பா தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து 27ல் மாநகராட்சி மார்க்கெட், டூவீலர், நவீன கழிப்பிடங்கள் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஏலம் நடந்த போது ஆணையர் பொறுப்பில் உதவி ஆணையர் இருந்ததால், முறையாக நடைபெறாமல் மாநகராட்சிக்கு வருவாய் குறைந்தது. கோவை மாநகராட்சியில் கடந்த மாதம் நடத்தி முடித்த ஏலத்தில் இ டெண்டர் அனுமதிக்கப்பட்டு, ரூ.70 கோடியாக இருந்த வருவாய் 200 கோடிக்கு மேல் உயர்ந்தது. அங்கு ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக இருப்பதால் துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்க முடிந்தது.

அதேபோல் மதுரையிலும் ஆணையர் நந்தகோபால் இ டெண்டர் முறையை அனுமதித்து ஏல வருவாயை பெருக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முக்கியமான கட்டத்தில் நந்தகோபாலின் ஐஏஎஸ் ரத்தாகி இருப்பது, மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இதனால் நந்தகோபால் மதுரை மாநகராட்சி ஆணையராக நீடிக்க முடியுமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தீர்ப்பாய உத்தரவு குறித்து நேற்று வரை அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. ஐஏஎஸ் அந்தஸ்து ரத்தானாலும் அரசு விரும்பினால் ஆணையராக நீடிக்கலாம். ஆனால் தீர்ப்பாயம் குறிப்பிட்ட அதிகாரி மீது ‘குற்றச்சாட்டு சரியான முறையில் நீக்கப்படவில்லை, நற்சான்றிதழ் அவசர கோலத்தில் அளிக்கப்பட்டுள்ளது’ என்று சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அவர் முக்கிய பொறுப்பில் நீடிக்க முடியுமா என்பது சிக்கலானது’ என்றார்.