தனியார் நிலத்தில் விளையாட்டு மைதானம்: மாநகராட்சி முடிவு

Monday, 06 January 2014 09:03 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print

தினமலர்               06.01.2014

தனியார் நிலத்தில் விளையாட்டு மைதானம்: மாநகராட்சி முடிவு

சென்னை:திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், 60 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் தனியார் விளையாட்டு மைதானத்தை, வளர்ச்சி உரிமை மாற்றம் மூலம், மாநகராட்சி வசம் எடுத்து கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள விம்கோ நகரில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, மூன்று ஏக்கர் காலி நிலம் உள்ளது. அந்த இடத்தை, திருவொற்றியூர் பகுதி இளைஞர்கள், விளையாட்டு மைதானமாக பயன்
படுத்தி வருகின்றனர்.

திருவொற்றியூரில் வேறு எந்த இடத்திலும் விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில், அந்த நிலம், அந்த பகுதி இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. திடீரென, தனியார் நிறுவனம், விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த பகுதிவாசிகள், மாநகராட்சி அந்த நிலத்தை பெற்று, விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் வளர்ச்சி உரிமை மாற்றம் மூலம், குறிப்பிட்ட நிலத்தை பெற்று, அங்கு விளையாட்டு மைதானம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

தற்போது, ஒரு லட்சத்து 32 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட அந்த இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைத்தால், தனியார் நிறுவனத்திற்கு, நில பரப்பளவை காட்டிலும் இரண்டரை மடங்கு கூடுதலாக எப்.எஸ்.ஐ., (தள பரப்பு குறியீடு) கிடைக்கும். இது தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'தனியார் நிறுவனம் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் எப்.எஸ்.ஐ., கொடுத்து நிலத்தை பெறுவோம். இல்லாவிட்டால் நிலம் கையகப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார்.