சென்னை அரசு மருத்துவமனைகளில் "அம்மா' உணவகங்கள்

Monday, 22 September 2014 07:09 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print

தினமணி      22.09.2014

சென்னை அரசு மருத்துவமனைகளில் "அம்மா' உணவகங்கள்


சென்னையில் உள்ள 4 முக்கிய அரசு மருத்துவமனைகளில் "அம்மா' உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (செப்.22) தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வார்டுக்கு ஒன்று என 200 அம்மா உணவகங்கள் உள்ளன.

மேலும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த உணவகங்களில் மலிவு விலையில் இட்லி, பொங்கல், சப்பாத்தி, சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் விற்கப்படுகின்றன. இந்த உணவகங்களுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்களை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,திருவல்லிக்கேணி அரசு கஸ்தூர்பா காந்தி தாய் -சேய் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை நேரடியாகத் தொடங்கி வைக்கிறார்.

மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளின் வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.