குடிசைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 285 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் நிதி உதவி அமைச்சர் வழங்கினார்

Monday, 10 August 2009 12:24 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமணி 10.08.2009

குடிசைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 285 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் நிதி உதவி அமைச்சர் வழங்கினார்

விருதுநகர், ஆக. 8: விருதுநகர் நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 285 பேருக்கு முதல் தவணை மானியமாக தலா ரூ. 15 ஆயிரம் வீதம் ரூ. 42.75 லட்சம் மதிப்பிலான காசோலைகளை பயனாளிகளுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சனிக்கிழமை வழங்கினார்.

விருதுநகர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:

தமிழகத்திலேயே விருதுநகரில் தான் பாதாள சாக்கடைத் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது. பணி முடிவடைந்த பகுதிகளில் புதிய தரமான தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விருதுநகரில் புதிய சிமெண்ட் மற்றும் தார்ச் சாலைகள் அமைக்கும் பணி 2 ஆண்டுகளில் நிறைவடையும். சாலைப் பணிக்காக முதல்வர் கருணாநிதி ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார் அமைச்சர்.
ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் பேசியதாவது:

விருதுநகர் நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 11.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 7.23 கோடி வீடு கட்ட அரசு மானியம். மீதமுள்ள ரூ. 4 கோடி இப் பகுதிகளில் சாலை, தெரு விளக்கு வசதிகள் செய்ய செலவிடப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடிசை வாழ் மக்களுக்கு 4 சதவீத குறைந்த வட்டியில் ரூ. 20 ஆயிரம் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார் ஆட்சியர்.

நகராட்சித் தலைவர் கார்த்திக் கரிக்கோல்ராஜ் வரவேற்றார்.
விழாவில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.கே.எஸ்.எஸ்.வி.டி. சுப்பாராஜ், நகராட்சிப் பொறியாளர் ரவீந்திரன், நகர் அமைப்பு அலுவலர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி ஆணையர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.