குடிசை மேம்பாடு திட்டத்தில் வீடு கட்டுவோர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர்

Wednesday, 08 December 2010 09:55 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமணி               08.12.2010

குடிசை மேம்பாடு திட்டத்தில் வீடு கட்டுவோர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர்

திருநெல்வேலி,டிச.7: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் குடிசை மேம்பாட்டுத் திட்டத்தில் வீடு கட்டுவோர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் என். சுப்பையன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநகராட்சிப் பகுதியில் குடிசையில் வசிக்கும் மக்களை முன்னேற்றும் விதமாக, மத்திய, மாநில அரசுகிளின் ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசைப் பகுதி மேம்படுத்தும் திட்டம் ரூ. 19.99 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ் 750 புதிய வீடுகள் கட்டுதல், 1,253 குடியிருப்புகளை அபிவிருத்தி செய்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பயனாளிகளுக்கு 4 கட்டங்களில் தவணை அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது. இத் தொகை, மாநகராட்சி இளநிலைப் பொறியாளரால் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

இருப்பினும் அவ்வப்போது பயனாளிகளுக்கு தவணைத்தொகை சரியாக வழங்கப்படுவதில்லை என புகார்கள் வருகின்றன. எனவே, அனைத்துக் கட்ட நிலைகளிலும் பணம் கிடைக்காதோர், தங்கள் பெயர், முகவரி, வேலை வழங்கப்பட்ட ஆணை, வீட்டின் தற்போதைய நிலை புகைப்படம் ஆகியவற்றுடன் மாநகராட்சி மைய அலுவலகத்தில் முறையிடலாம். இதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

இத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளது. எனவே, பயனாளிகள் காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார் அவர்.