9600 கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் மாநகராட்சியில் இன்று அவசரகூட்டம்

Tuesday, 14 December 2010 05:29 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினகரன்                    14.12.2010

9600 கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் மாநகராட்சியில் இன்று அவசரகூட்டம்

கோவை, டிச.14: கோவை மாநகராட்சியில், நீர் நிலையில் வசிப்போருக்கான கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் குறித்து இன்றைய அவசர கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

கோவை மாநகராட்சியின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது. இதில், கோவை மாநகராட்சியின் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைப்பது குறித்து விவாதிக்கப்படும். கோவை மாநகராட்சி சார்பில், 443.55 கோடி ரூபாய் செலவில் குடிசைகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் துவங்கியது. 173 குடிசைப்பகுதியில் உள்ள வீடுகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதுவரை 5858 குடிசைகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டப்பட்டது. தற்போது நீர் நிலை புறம்போக்கில் வசிக்கும், 9600 பயனாளிகள் குடும்பத்திற்காக, உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் 6 மாடி கொண்ட கான்கிரீட் வீடு கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டது. 184 கோடி ரூபாய் செலவில் வீடு கட்ட முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கான மண் ஆய்வு நடந்தது. இந்நிலையில், வீடு கட்டும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க தயாராகி விட்டது. இன்றைய கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் இடம் பெறும். உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், 8 ஏக்கர் நிலத்தை யும், வீடு கட்டும் திட்டத்தையும் குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைப்பது குறித்து கவுன்சிலர்களின் கருத்து பெறப்படவுள்ளது.

பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில், ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்திலிருந்து கிழக்கு மண்டலத்தில் சில பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்ல ஆயிரம் மி.மீ விட்டம் கொண்ட குழாய் அமைக்கப்படவுள்ளது. 8.5 கோடி ரூபாய் செலவில், 11 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் குழாய் அமைக்க அனுமதி கோரும் தீர்மானம் இடம்பெறவுள்ளது. நகர் பகுதி ரோடுகளை, சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சீரமைக்கும் திட்டம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும். .கம்யூ., கவுன்சில் குழு தலைவர் புருசோத்தமன் கூறுகையில், " சங்கனூர் பள்ளம், நகரில் உள்ள 8 குளங்கள் மற்றும் வாய்க்கால் கரை பகுதியில் வசிப்போர் குறித்த கணக்கெடுப்பு விவரம் அறிவிக்கப்படவில்லை. யாருக்கு வீடு என தெரியாமல் எப்படி வீடு கட்ட முடியும். மாநகராட்சி நிர்வாகத்தால் ஏன் வீடு கட்ட முடியவில்லை என்பது தெரியவில்லை. பல்வேறு விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதித்து பேசவுள்ளோம், " என்றார்.