புளியந்தோப்பில் ரூ. 6 கோடியில் 192 குடியிருப்புகள் புதுப்பிப்பு

Tuesday, 08 September 2009 06:52 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமணி 08.09.2009

புளியந்தோப்பில் ரூ. 6 கோடியில் 192 குடியிருப்புகள் புதுப்பிப்பு

சென்னை, செப். 7: சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய 192 குடியுருப்புகள் ரூ. 6 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருவதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி, மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திங்கள்கிழமை சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை பார்வையிட்டனர். மேலும் அங்குள்ள குறைபாடுகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தனர். அதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் கொசு மருந்து தெளிக்குமாறும், குப்பைகளை நாள்தோறும் அகற்றுமாறும் மாநகராட்சி அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

இங்கு ரூ. 26 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகள் ஆகி பழுதடைந்துள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை புதிதாகக் கட்டித் தர முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த குடியிருப்பில் 4 பகுதிகளில் உள்ள 192 வீடுகள் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டித் தரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி ஓராண்டுக்குள் முடிவடைந்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றார் மேயர்.
ஆய்வின் போது ஆளுங்கட்சி கொறடா ஏகப்பன், மாநகராட்சி அலுவலர்கள், குடிநீர் வாரிய அலுவலர்கள், குடிசைமாற்று வாரிய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.