ஏழைகளுக்கு 3,000 வீடுகள் கட்ட 31 ஏக்கர் : மூன்று இடங்களில் நிலம் தேர்வு

Monday, 27 August 2012 06:58 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமலர்      27.08.2012

ஏழைகளுக்கு 3,000 வீடுகள் கட்ட 31 ஏக்கர் : மூன்று இடங்களில் நிலம் தேர்வு

சென்னை : துரைப்பாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை அடுத்து, ஏழை மக்களுக்கு குடியிருப்பு கட்ட, மூன்று இடங்களில், 31 ஏக்கர் நிலங்களை குடிசை மாற்று வாரியம் தேர்வு செய்துள்ளது.நகர்ப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஜவகர்லால் தேசிய நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், 2005ல் துவக்கப்பட்டது. இதன்படி, நகர்ப்புற பகுதிகளில், சாலைகள், பேருந்து நிறுத்தம், குடி நீர் வினியோகம், கழிவு நீர் வடிகால் போன்ற வசதிகள் மேற்கொள்ளப்படும்.இத்துடன், நகர்ப்புற ஏழை மக்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களில் வசிப்பவர்களுக்கும், மாற்று குடியிருப்பு கட்டவும் திட்டமிடப்பட்டது.
 
இதன்படி, தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை நகரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டன.குடியிருப்பு திட்டம்இம்மூன்று நகரங்களிலும் சேர்த்து, 44,870 வீடுகளை, 1,939 கோடி ரூபாய் செலவில் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், சென்னையில் மட்டும், 1,338.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 29,864 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் எழில் நகர், பெரும்பாக்கம் எழில் நகர், பெரும்பாக்கம் ஒன்று, இரண்டு ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. இதில், இதுவரை, 26,702 வீடுகள் கட்டுவதற்கான நிலம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், எஞ்சிய, 3,162 வீடுகள் கட்டுவதற்கு இப்பகுதிகளில் நிலம் இல்லை என்பதால் வேறு பகுதிகளில் இதற்கான நிலங்களை தேட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
 
இதேபோல, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளிலும் இனி புதிதாக குடியிருப்புகள் கட்ட இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, புதிய இடங்களில் தேவையான நிலங்களை தேர்வு செய்து கையகப்படுத்தும் பணிகளை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.மூன்று இடங்களில்...இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டத்தில் நிலுவையில் உள்ள, 3,162 வீடுகளுக்கு தேவையான நிலம் பெறுவது மற்றும் எதிர் காலத்தில் உருவாக்கப்படும் புதிய திட்டங்களுக்கும் தேவையான நிலங்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காக, புரசைவாக்கத்தில் திடீர் நகர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோழிங்கநல்லூரை அடுத்த நாவலூர், திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி செல்லும் வழியில் உள்ள கூடபாக்கம் இடங்களில் காலியாக உள்ள, 31 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதில், முதல்கட்டமாக, நாவலூரில், 2,144 வீடுகளும், கூடபாக்கத்தில், 1,024 வீடுகளும் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Monday, 27 August 2012 06:59