அம்மன் குளத்தில் கட்டிய 792 வீடுகள் அடுத்த மாதம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு

Monday, 08 April 2013 10:41 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print
தினகரன்       08.04.2013

அம்மன் குளத்தில் கட்டிய 792 வீடுகள் அடுத்த மாதம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு


கோவை: கோவை அம்மன் குளத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட 792 வீடுகள் அடுத்த மாதம் பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்படும்.

கோவை புலியகுளம் அம்மன் குளத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 27 கோடி ரூபாய் செலவில் 840 வீடுகள் கட்டப்பட்டது. இதில் 48 வீடுகள் புதை மண் காரணமாக சாய்ந்தது. இந்த  வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையிருந்தது. இந்நிலையில், இந்த வீடுகள் இடிக்கப்பட்டது. மற்ற வீடுகள் தரமாக உள்ளதா என அரசு பொறியியல் கல்லூரி நிபுணர் குழு மூலமாக ஆய்வு நடத்தப்பட்டது. நிபுணர்கள் குழு வீடுகள் நல்ல நிலையில் இருப்பதாக சான்று வழங்கியது. இந்த வீடுகள் வரும் மே மாதம் முதல் வாரத்தில் பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்படும்.
 
உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் 94 கோடி ரூபாய் செலவில் 1888 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 48 வீடுகள் கொண்ட ஒரு பிளாக் இலகு மண் காரணமாக விரிசல் விட்டது. விரிசல் விட்ட வீடுகள் இடிக்கப்பட்டது. மற்ற வீடுகளின் தாங்கு திறன் குறித்து சோதனை நடக்கிறது. இந்த வீடுகளில் மக்கள் வசிக்கலாம் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இந்த வீடுகள் வரும் டிசம்பர் மாதம் பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்படும். தடாகம் ரோடு முத்தண்ண குளத்தின் கரையில் 997 வீடுகளும், உக்கடம் வாலாங்குளத்தின் ஆக்கிரமிப்பில் 457 வீடுகளும் உள்ளது. இந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு அம்மன் குளம் மற்றும் உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாக வீடுகளை ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’ நகரில் நீர் நிலை ஆக்கிரமிப்பில் வசிப்பவர்களுக்கு மாற்று இடத்தில் அடுக்குமாடி கான்கிரீட் வீடுகள் கட்டி தரும் பணி நடக்கிறது.

நகரில் இதுவரை  8,148 வீடுகள் கட்ட நகர் மற்றும் நகரை ஒட்டிய இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 5,292 வீடுகள் கட்ட விரைவில் இடம் தேர்வு செய்யப்படும். இடம் தேர்வு செய்த இடங்களில் வீடுகள் கட்டும் பணி விரைவாக நடத்தப்படும். ஒரிரு ஆண்டுகளில் கோவை நகரில் குடிசைகள் இருக்காது. குடிசைகள் இருந்த இடத்தில் கோபுர உயர கான்கிரீட் மாளிகைகளை காண முடியும். கோவை நகர் பகுதியில் இடம் கிடைக்காவிட்டால் புறநகர் பகுதியில் இடம் தேர்வு செய்து அங்கே அடுக்குமாடி கான்கிரீட் வீடு கட்டி தரப்படும், ’’ என்றார்.