தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சிறப்புக் கோட்டம் மூடப்படுகிறது .

Tuesday, 22 September 2009 05:31 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமணி 22.09.2009

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சிறப்புக் கோட்டம் மூடப்படுகிறது .

ஒசூர், செப்.21: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் புதியதாக தொடங்கப்பட்ட சிறப்புக் கோட்டங்களை தமிழக அரசு மூட உத்தரவிட்டுள்ளது.

தொழில் நகரங்களான கோவை மற்றும் ஒசூர் ஆகியவற்றில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நகரங்களில் அதிக எண்ணிக்கையில் வசித்துவரும் தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டித் தர வீட்டுவசதி வாரிய அமைச்சராக இருந்த சுப.தங்கவேலன் சிறப்புக் கோட்டங்களைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஒசூரில் சிறப்புக் கோட்டங்களுக்கான அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.

முதன்மை செயற்பொறியாளர், உதவி பொறியாளர், கணக்காளர், காசாளர், சர்வேயர், எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தன.

ஏற்கெனவே ஒசூரிலும், கோவையிலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகங்கள் (மெயின் டிவிஷன்) முழுமையாகச் செயல்பட்டு வந்த நிலையில், சிறப்புக் கோட்டம் அவசியமா? என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஒசூர் சிறப்புக் கோட்டம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மாளிகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய செயற்பொறியாளர் அலுவலகம் ஓராண்டாக செயல்பட்டு வந்தது.

ஒசூர் சிறப்புக் கோட்டத்தில் பாகலூர் அட்கோ பகுதி 6 மற்றும் பகுதி 7 ஆகியவற்றில் சுயநிதி திட்டத்தின் கீழ் (பயனாளிகளிடம் இருந்து முழுத் தொகையும் பெற்றுக் கொண்டு வீட்டுவசதி வாரிய நிலத்தில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம்) அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனி வீடுகள் கட்டப்பட்டன.

சிறப்புக் கோட்டத்தின் மூலம் ரூ.450 கோடியில் புதிய புதிய திட்டத்தின் கீழ் மத்திய வருவாய் பிரிவு, உயர் வருவாய்ப் பிரிவு உள்ளிட்ட வீடுகள் கட்டப்பட்டன.

ஆனால் பழைய வீட்டு வசதி வாரியம் (மெயின் டிவிஷன்) மூலம் கோகுல் நகர் அருகில் ஒரு பகுதியில் மட்டும் புதிய வீடுகள் கட்டப்பட்டன. அத்துடன் பழைய வீடுகளையும், வீட்டு மனைகளையும், வர்த்தக மனைகளையும் மட்டுமே இப்பிரிவு விற்பனை செய்து வந்தது.

மெயின் டிவிஷன் அலுவலகத்தில் போதிய பணிகள் இல்லாத சூழலில், சிறப்புக் கோட்டம் தேவை இல்லை என்ற முடிவை வாரியம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறப்புக் கோட்டத்தில் பணியாற்றி வந்த ஒரு சில அலுவலர்கள் ஒப்பந்ததார்களுடனும், பயனீட்டாளர்களுடனும் சிண்டிகேட் அமைத்து செயல்பட்டதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் சென்றதை அடுத்து சிறப்புக் கோட்டம் மூடப்படுகிறது என்றும் அலுவலக வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஒசூர் சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் எம்.நடேசனிடம் கேட்டபோது, "தமிழக அரசு ஒசூர் மற்றும் கோவை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சிறப்புக் கோட்டங்களை மூட முடிவு செய்துள்ளது. இதனால் இதுவரை ஒசூர் சிறப்புக் கோட்டத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வந்த என்னை திருநெல்வேலிக்கு பணி மாறுதல் செய்துள்ளனர்.

சிறப்புக் கோட்டத்தின் பணிகளை இனி ஒசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளரிடம் (மெயின் டிவிஷன்) செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கவுள்ளேன் என்றார்.

Last Updated on Tuesday, 22 September 2009 05:32