துணை நகரம் அமைப்பது தொடர்பாக வீட்டுவசதி வாரியத்தலைவர் முருகையா பாண்டியன் ஆய்வு

Saturday, 15 June 2013 11:11 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினத்தந்தி               15.06.2013

துணை நகரம் அமைப்பது தொடர்பாக வீட்டுவசதி வாரியத்தலைவர் முருகையா பாண்டியன் ஆய்வு

தோப்பூர்–உச்சப்பட்டியில் துணை நகரம் அமைப்பது தொடர்பாக வீட்டுவசதி வாரியத்தலைவர் முருகையா பாண்டியன் ஆய்வு செய்தார்.

துணை நகரம்

மதுரை மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி, தோப்பூர் ஆகிய கிராமத்தில் 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் 19 ஆயிரத்து 500 மனைகளுடன் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைதொடர்ந்து முதற்கட்டமாக சாலை வசதியுடன் உள்ள தோப்பூர் பகுதி 3–ல் 23.70 ஏக்கரில் சுமார் 448 எண்ணிக்கையில் மனை மேம்பாட்டு திட்டத்திற்கு டெண்டர் வரவேற்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

உள்ளுர் திட்டக்குழுமம்

இரண்டாவது கட்டமாக 50.15 ஏக்கரில் 1,000 எண்ணிக்கையில் மனை மேம்பாட்டு திட்டத்திற்கு மனை வரைபடம் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு மதுரை உள்ளூர் திட்டக்குழுமத்திட்டம் ஒப்புதல் பெறும் நிலையில் உள்ளது.

மூன்றாவது கட்டமாக 586.86 ஏக்கர் நிலத்தில் மனை மேம்பாட்டு திட்டம் தொடங்குவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படும். இதில் 14,300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும் மற்றும் 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆய்வு

இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு முதற்கட்டமாக ரூ.6 கோடியே 93 லட்சம் வாரிய நிதியில் இருந்து செயல்படுத்துவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த பணிகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் முருகையா பாண்டியன் நேற்று உச்சப்பட்டி மற்றும் தோப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது முதலமைச்சரின் சீரிய திட்டமான இந்த துணைக்கோள் நகரத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது தலைமை பொறியாளர் ராஜேந்திரன் மேற்பார்வை பொறியாளர் பாலச்சந்தர், செயற்பொறியாளர் எல்.பிராங்க் பெர்னாண்டோ, தனக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கருத்தக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.