பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு குறைந்த விலையில் 2,300 குடியிருப்புகள்: தில்லி மேம்பாட்டு ஆணையம் தகவல்

Thursday, 27 June 2013 07:58 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமணி               27.06.2013

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு குறைந்த விலையில் 2,300 குடியிருப்புகள்: தில்லி மேம்பாட்டு ஆணையம் தகவல்

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு குறைந்த விலையில் 2,300 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று தில்லி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தில்லி மேம்பாட்டு ஆணைய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

துவராகா 23 செக்டர், 8-ஆவது பாக்கெட்டில் 2,300 குடியிருப்புகள் கடந்த மார்ச் மாதம் கட்டி முடிக்கப்பட்டன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காகக் கட்டப்பட்டுள்ள இக்குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வது தற்போது நடைபெற்று வருகிறது. 

குறைந்த விலையில் கட்டப்படும் குடியிருப்புகள் "ப்ரி ஃபேபரிகேட்டட்' தொழில்நுட்பத்தில் கட்டப்படுகின்றன. இத்தொழில்நுட்பத்தின் படி, குடியிருப்புக்கான தூண்கள், ஸ்லாப்கள், படிக்கட்டுகள் உள்ளிட்டவை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு இணைத்துக் கட்டப்படுகின்றன.

ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சிர்ஸாபூரில் 4,740 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதே திட்டத்தின் கீழ், கத்புத்லி காலனி, கல்காஜி உள்ளிட்ட  21 குடிசைப் பகுதிகளுக்கு அருகில் 37,000 குடியிருப்புகள்  கட்டப்படும். ரோகிணியில் 10,440 குடியிருப்புகள், நரேலாவில் 5,860 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், 7,000 குடியிருப்புகள் கட்டவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குடியிருப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்' என்றார் அவர்.

"தில்லி மாஸ்டர் பிளான்' திட்டத்தின்படி, 2021-ஆம் ஆண்டுக்குள் தில்லியின் மக்கள் தொகை 2.3 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கேற்ப 24 லட்சம் குடியிருப்புகள் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் குடிசைப் பகுதிகளைக் கட்டுப்படுத்த, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு குறைந்த விலையில் குடியிருப்புகள் ஏற்படுத்தித் தருவது அவசியமாகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு குறைந்த விலையில் 1 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்று கடந்த 2011-12-இல் அறிவிக்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை 2,300 குடியிருப்புகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.