ரூ.1.58 கோடி பெற்று ஊழியர் குடியிருப்பை "தத்தெடுத்த' மாநகராட்சி

Wednesday, 24 July 2013 08:16 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print
தினமலர்      24.07.2013

ரூ.1.58 கோடி பெற்று ஊழியர் குடியிருப்பை "தத்தெடுத்த' மாநகராட்சி

மதுரை:வீட்டுவசதிவாரியம் ரூ. 1.58 கோடி செலுத்தியதால், ரேஸ்கோர்ஸ், டி.ஆர்.ஓ., காலனி, டீன்ஸ் குடியிருப்பு பகுதிகளை, மதுரை மாநகராட்சி பராமரிக்க எடுத்துக் கொண்டது.

இப்பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இதில், பெரும்பாலும் அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர். வீட்டுவசதி வாரியம் பராமரிப்பில் இருந்த இவ்வீடுகள், மோசமான நிலையில் இருப்பதுடன், ரோடு, தெருவிளக்கு, சாக்கடை, குப்பை, குடிநீர், பாதுகாப்பு என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

அடிப்படை வசதியை சரிசெய்யும்படி மனுகொடுத்தால், வீட்டுவசதி வாரியமும், மாநகராட்சியும், "இது எங்கள் பொறுப்பில் இல்லை' எனக்கூறி, தட்டிக் கழித்துவிடுகின்றன. இதனால் மேம்பாட்டுப் பணிகள் நடக்கவில்லை. இந்நிலையில், வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, மாநகராட்சிக்கு இந்தப் பகுதிகளை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

கட்டடங்கள் அளவு அடிப்படையில் ரூ. ஒரு கோடியே 58 லட்சத்து 71 ஆயிரத்து 200ஐ, வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் சாலமன்ஜெயகுமார், மாநகராட்சிக்கு வழங்கினார். இதையடுத்து, இப் பகுதிகள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்தன. இனி இப்பகுதிகளின் அடிப்படை வசதிகளை மாநகராட்சியே பராமரிக்கும்.