வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விலை ரூ.1.72 கோடி ரியல் எஸ்டேட் தொழிலை மிஞ்சும் அளவிற்கு திட்டம்

Friday, 13 December 2013 09:45 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமலர்             13.12.2013 

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விலை ரூ.1.72 கோடி ரியல் எஸ்டேட் தொழிலை மிஞ்சும் அளவிற்கு திட்டம்

திருவான்மியூரில், வீட்டுவசதி வாரிய சுயநிதி திட்டத்தில், புதிதாக கட்டப்பட உள்ள உயர்தர வீடுகளுக்கான விலை, 1.72 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

பட்டினப்பாக்கத்தில், இன்னும் இறுதி திட்ட ஒப்புதல் கிடைக்காத நிலையில், சுயநிதி அடிப்படையில் குடியிருப்பு கட்டும் திட்டத்தை, வீட்டுவசதி வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதில், வீட்டின் விலை 1.99 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த அளவுக்கு, விலை கொடுத்து, வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால், இதற்கான, விண்ணப்ப விற்பனைக்கான காலக்கெடு, அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ரூ.1.72 கோடி

இந்த நிலையில், திருவான்மியூர் இந்திரா நகரில், 'இம்ப்காப்ஸ்' அருகில், 204 வீடுகள், கட்டும் திட்டத்தை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதில், சுயநிதி அடிப்படையில் புதிதாக, 40 வீடுகளை கட்ட வீட்டுவசதி வாரியம் முடிவு செய்து உள்ளது.

இப்போது, இதற்கான விற்பனை அறிவிப்பை வாரியம் வெளியிட்டு உள்ளது. இதன்படி, இங்கு உயர் வருவாய் பிரிவினருக்கான, வீடுகளின் விலை, 1.72 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், கார் நிறுத்தும் இடத்துக்கு மட்டும் தனியே, 3 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தில், நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடுகளின் விலை, 1.40 கோடி ரூபாய், குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகளின் விலை, 54 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில், வீடு வாங்க, நேற்று முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. முன்பணமாக, வீட்டின் விலையில், ஐந்து சதவீத தொகையை செலுத்த வேண்டும் என, வீட்டுவசதி வாரியம் அறிவித்து உள்ளது.