அனைத்து குடிசைப் பகுதிகளிலும் கழிப்பறை வசதி

Monday, 01 September 2014 07:49 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமணி      01.09.2014

அனைத்து குடிசைப் பகுதிகளிலும் கழிப்பறை வசதி

தில்லியின் அனைத்து குடிசைப் பகுதிகளிலும் சுகாதாரம், கழிப்பறை வசதிகள் உருவாக்கப்படும் என்று தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் (டி.யு.எஸ்.ஐ.பி.) அறிவித்துள்ளது.

இதுகுறித்து வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி அமர்நாத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குடிசைப் பகுதிகளில் உள்ள பழைய கழிப்பறைகளுக்குப் பதிலாக, நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கழிப்பறைகளை நிகழாண்டில் ரூ.42 கோடி செலவில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது தில்லியில் உள்ள 685 குடிசைப் பகுதிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கழிப்பறை வசதியற்ற குடிசைப் பகுதிகளில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர, இடப் பற்றாக்குறையுள்ள 53 குடிசைப் பகுதிகளில் 67 நடமாடும் கழிப்பறைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கழிப்பறைகளை அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை தொண்டு நிறுவனங்கள், சுகாதார நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு, தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்துக்கு வழங்கும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தில்லி பிரதேச பட்ஜெட்டின்போது, "தலைநகரில் உள்ள குடிசைப் பகுதிகளில் கழிப்பறை, சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும்' என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Monday, 01 September 2014 09:31