தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்

Sunday, 14 May 2017 00:00 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினத்தந்தி      14.05.2017

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்


தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் குறிஞ்சி நகர் திட்டப்பகுதியில் ரூ.10 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 160 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சுகுணாபுரம் திட்டப்பகுதியில் ரூ.4 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 64 அடுக்குமாடி குடியிருப்புகள் என 224 அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

திருமண மண்டபம்

மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் சின்னாம்பாளையம் கிராமத்தில் பொள்ளாச்சி–உடுமலைப்பேட்டை பிரதான சாலையில் சிதிலமடைந்த 72 குடியிருப்புகளை இடித்து விட்டு புதிதாக அதே இடத்தில் ரூ.11 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 108 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள்; கோயம்புத்தூரில் ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய சரக மற்றும் கோட்ட அலுவலக வளாகம்; சென்னை மாதவரம் ஜம்புலி காலனியில் சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் மூலம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம்;

நகர் ஊரமைப்புத்துறையின் சார்பில் திருச்சியில் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் உறுப்பினர் செயலர், உள்ளூர் திட்டக்குழும அலுவலக கட்டிடம்; திருநெல்வேலியில் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் உறுப்பினர் செயலர், உள்ளூர் திட்டக்குழும அலுவலக கட்டிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மொத்தம் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

மென்பொருள்

கட்டிட வரைபடம், மனைப்பிரிவு வரைபடம் மற்றும் நிலப்பயன் மாற்றம் குறித்த உத்தேசங்களுக்கு கணினி வாயிலாக ஒப்புதல் வழங்குவதற்கு ஏதுவாக ரூ.2 கோடியே 60 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட மென்பொருளை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த புதிய மென்பொருளால், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tn.gov.in/tcp என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு சமர்ப்பிக்கும் போது கணினியால் வழங்கப்படும் தனித்த எண்ணைக்கொண்டு மனுதாரர் தனது விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்குவதன் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். ஒப்புதல் கோரும் அனைத்து விதமான விண்ணப்பங்களை நகர் ஊரமைப்பு துறையின் எந்த ஒரு சார்நிலை அலுவலகத்திற்கும் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கவும், இட நேராய்வு செய்யவும், திட்ட அனுமதி ஆணை மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்ட வரைபட நகல்களை இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திட்ட அனுமதி ஆணை

மேலும், விண்ணப்பம் இணையதளத்தின் வாயிலாக பெறப்பட்டதற்கு ஒப்பளிப்பு வழங்குதல், இட நேராய்வு தேதி குறித்த விவரம் தெரிவித்தல், கூடுதல் விவரங்கள் கோருதல், மனுதாரர் விரும்பினால் அலுவலர்களை சந்தித்து விளக்கம் தெரிவிக்க வாய்ப்பு வழங்குதல், கட்டணங்கள் செலுத்த கோரும் கடிதம் அனுப்புதல் மற்றும் திட்ட அனுமதி ஆணை வழங்குதல் ஆகியவற்றை குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மற்றும் மின்னஞ்சல் மூலம் (இ–மெயில்) மனுதாரருக்கு தெரிவிக்க உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.