குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை

Monday, 20 July 2009 05:02 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமணி 20.07.2009

குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை

புதுதில்லி, ஜூலை 19: குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க நகரமைப்பு திட்டமிடல் மற்றும் இதர சட்டங்களில் உரிய திருத்தங்களைச் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் நகரங்களில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளையும் கணக்கெடுத்து, குறைந்த செலவிலான வீட்டு வசதித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிலங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் குமாரி செல்ஜா கடிதம் அனுப்பியுள்ளார். கடித விவரம்:

நகரங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையில் வீடுகளையும், அடிப்படை வசதிகளையும் அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதற்கான நிலங்களை ஒதுக்கீடு செய்ய நகரமைப்பு திட்டமிடல், நகர்ப்புறப் பகுதி வளர்ச்சி மற்றும் நகராட்சி சட்டங்களில் திருத்தங்களைச் செய்வது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

நகரங்கள், பெருநகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகள் குறித்து உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி, அதுகுறித்த தகவல்களை 3 மாதங்களுக்குள் தொகுக்க வேண்டும்.

அதன்பிறகு, ஏழைகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையில் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்குத் தேவையான நிலங்களை ஒதுக்கீடு செய்வது, மானிய உதவி அளிப்பது, தொழில்நுணுக்க உதவிகளை அளிப்பது குறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவரும், நகரங்களில் குடிசைகளில் வசிக்கும் ஏழைகளுக்கான ராஜீவ் காந்தி வீட்டு வசதித் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

குடிசைப் பகுதிகள் குறித்த தகவல்களைத் திரட்டி தொகுப்பது, குடிசைகள் இல்லாத நகரங்களை உருவாக்குவது, நகரங்களில் உள்ள ஏழைகளுக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுத்து, அதற்கான சொத்துரிமையை அவர்களுக்கே வழங்குவது உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய திட்டத்தைச் செயல்படுத்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு முந்தைய நகரமைப்புத் திட்டங்களில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், அவர்கள் நகரங்களில் புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து வசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மக்களுக்கு உரிய வீடுகளைக் கட்டிக் கொடுத்து, அவர்கள் சட்டரீதியான உரிமைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் நகரங்களில் குடிசைகளில் வசிக்கும் ஏழைகளின் மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும் என அந்தக் கடிதத்தில் குமாரி செல்ஜா வலியுறுத்தியுள்ளார்.