நகரப் பகுதி ஏழைகளுக்கு 15 லட்சம் வீடுகள்: அமைச்சர் குமாரி செல்ஜா

Sunday, 19 July 2009 00:00 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமணி 20.07.2009

நகரப் பகுதி ஏழைகளுக்கு 15 லட்சம் வீடுகள்: அமைச்சர் குமாரி செல்ஜா

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக சனிக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார் மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஓழிப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமை

புதுச்சேரி, ஜூலை 18: நாடு முழுவதும் நகரப் பகுதியில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு வசதியை உறுதி செய்ய மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் 15 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது என்று மத்திய வீட்டு வசதி, நகர வறுமை ஒழிப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா சனிக்கிழமை கூறினார்.

புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரெட்டியார்பாளையம் லாம்பர்ட் சரவணன் நகரில் 1136 அடுக்குமாடி தொகுப்பு வீடுகளுக்கு அடிக்கல், அதேப் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 1660 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா பேசியது:

நாடு முழுவதும் வீட்டு வசதிக்காக எங்கள் அமைச்சகம் ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

ஏழைகளைப் பொறுத்தவரை வீட்டு வசதி மட்டுமின்றி அந்தப் பகுதியில் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

நாடு மற்றும் நகரங்கள் வளரும்போது ஏழை மக்கள் பின்தங்கிவிடக் கூடாது. அவர்களுக்கும் வளர்ச்சியில் பங்கு இருக்கிறது.

மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசுதான் நகரப் பகுதி ஏழைகளின் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

புதுச்சேரியைப் பொறுத்தவரை பல்வேறு வீட்டு வசதி திட்டங்களுக்காக ரூ.153 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா ஒரு குடிசையில்லா நாடாக மாற வேண்டும் என்று திட்டம் அறிவித்துள்ளது. அதில் புதுச்சேரி முன்னோடியாக இருக்க வேண்டும்.

புதுச்சேரிக்கு மேலும் ரூ.100 கோடி ஒதுக்க தயாராக இருக்கிறோம். இதற்கு ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலான சரியான திட்டம் தேவை என்றார் மத்திய அமைச்சர் செல்ஜா.

காரைக்கால் திருநள்ளாறு கோயில் நகரத் திட்டத்துக்கு ஹட்கோ மூலம் புதுச்சேரி அரசுக்குக் கடனாக ரூ.26 கோடிக்கான காசோலையை முதல்வர் வைத்திலிங்கத்திடம் மத்திய அமைச்சர் செல்ஜா வழங்கினார்.

மேலும் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.

மத்திய திட்டம், நாடாளுமன்ற விவகாரம், கலாசாரத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் கந்தசாமி, நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏக்கள் விசுவநாதன், கலைநாதன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.