781 துப்புரவுப் பணியாளர்களுடன் குப்பை சேகரிக்கும் பணி

Friday, 31 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print

தினமணி             31.01.2014

781 துப்புரவுப் பணியாளர்களுடன் குப்பை சேகரிக்கும் பணி

திருப்பூர் மாநகரில் 30 வார்டுகளில், 781 துப்புரவுப் பணியாளர்கள், 600 தள்ளுவண்டிகள், 800 குப்பைத் தொட்டிகள் மூலமாக வீடுதோறும் குப்பை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) ஈடுபட உள்ளது.

 திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் 500 டன்களுக்கும் கூடுதலான குப்பை தெருக்களில் கொட்டப்படுகிறது. சுகாதாரப் பணிகளுக்குத் தேவையான துப்புரவுப் பணியாளர்கள் இல்லாததால், மாநகர் முழுவதும் குப்பையை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

 இப் பிரச்னைக்குத் தீர்வாக மொத்தமுள்ள 60 வார்டுகளில், 30-இல் குப்பையை அகற்றும் பணியை தனியார் வசம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 நகராட்சிகள், திருச்சியில் துப்புரவுப் பணிகளைச் சிறப்பாக செய்து வரும், சீனிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனம், திருப்பூர் மாநகரில் குப்பை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளது.

 இதுதொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை, சுகாதார அலுவலர்கள், மண்டலத் தலைவர்கள், நிலைக் குழுத் தலைவர்களுக்கு இதுகுறித்து படவிளக்கக் காட்சிகளுடன்

அந் நிறுவனத்தின் செயல்பாடுகள் விளக்கப்பட்டன.

 இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மேயர் அ.விசாலாட்சி தலைமை வகித்தார். துணை மேயர் சு.குணசேகரன், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜான், சுகாதாரக் குழுத் தலைவர் பூலுவப்பட்டி பாலு, நிலைக்குழுத் தலைவர்கள் முருகசாமி, அன்பகம் திருப்பதி, நகர் நல அலுவலர் செல்வராஜ், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 குப்பையை அகற்றும் தனியார் நிறுவன முதன்மை நிர்வாகி எஸ்.வெங்கடேஷ், இப் பணிகள் குறித்த விவரங்களை படவிளக்கக் காட்சிகளுடன் விளக்கினார்.

 இதில், துணை மேயர் சு.குணசேகரன் பேசியது:

 தாய்மைக்கு நிகர் தூய்மை என்ற இலக்குடன் சுகாதாரமான மாநகரை உருவாக்கும் வகையில், குப்பை அகற்றும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றார்.