டெங்கு பரவாமல் தடுக்க அக். 13 முதல் 16 வரை மெகா துப்புரவுப் பணி

Friday, 10 October 2014 07:53 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print
தினமணி       10.10.2014

டெங்கு பரவாமல் தடுக்க அக். 13 முதல் 16 வரை மெகா துப்புரவுப் பணி

டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் வரும் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மெகா துப்புரவுப் பணி (மாஸ் கிளீனிங்) மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும் என ஆட்சியர் ஜெயசிறீ அறிவுரை வழங்கியுள்ளார்.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

மழைக்காலம் தொடங்கவுள்ளதால் அச்சமூட்டும் டெங்குக் காய்ச்சலைத் தடுக்க, அதனைப் பரப்பும் ஈடிஸ் கொசு வகையின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் கொசு நல்ல தண்ணீரில்தான் வளரும். கழிவுநீரில் வளரும் கொசுக்கள் டெங்குவைப் பரப்புவதில்லை.

எனவே, பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களில் மழைநீர், நல்ல தண்ணீர் தேங்கும் டயர், பிளாஸ்டிக் டம்ளர், பூந்தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் சிரட்டை, முட்டை ஓடு போன்றவற்றை கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.

வீட்டில் ஓரிரு நாள்கள் வைத்திருந்து பயன்படுத்தும் பாத்திரங்கள், தொட்டிகளை பிளீச்சிங் பொடி போட்டு நன்றாக கழுவ வேண்டும். தொட்டிகளில் ஈடிஸ் கொசுக்களின் முட்டைகள் இருக்க வாய்ப்புள்ளது.

மேலும், அனைத்து மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள், தரைத்தள தொட்டிகளையும் சுத்தமாகக் கழுவ உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி முதல் குக்கிராமம் வரை மாவட்டம் முழுவதும் வரும் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மெகா துப்புரவுப் பணி நடத்தப்படவுள்ளது. பொதுமக்களும் இந்தப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் ஜெயசிறீ.