சிக்கந்தர்சாவடியில் ரூ. 40 கோடியில் வணிக வளாகம்: ஜனவரி முதல் செயல்படும்

Friday, 21 August 2009 05:51 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

தினமணி 21.08.2009

சிக்கந்தர்சாவடியில் ரூ. 40 கோடியில் வணிக வளாகம்: ஜனவரி முதல் செயல்படும்

மதுரை, ஆக. 20: மதுரை அருகே சிக்கந்தர்சாவடியில் 30 ஏக்கர் பரப்பளவில் ரூ. 40 கோடி செலவில் மத்திய அரசு மானியத்துடன் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுவரும் வணிக வளாகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் என்று அதன் முதுநிலைத் தலைவர் ரத்தினவேல் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளையும், வணிக வளாகம் அமைக்கும் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் மற்றும் தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்க நிர்வாகிகள் புதன்கிழமை பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ரத்தினவேல் கூறியதாவது:

மத்திய தொழில் வர்த்தகத் துறையின்கீழ் உள்ள தொழில் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயறு, பருப்பு வகைகள் மற்றும் உணவுப் பொருள் சம்பந்தப்பட்ட தொழில்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கிய வணிக வளாகமாக இது திகழும்.

வணிக வளாகத்தில் 250 கடைகள் இடம்பெறுகின்றன. கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் வணிக வளாகம் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்குவரும்.

அதன் பின்னர் மதுரைக்குள் உள்ள நவதானிய மொத்தக் கடைகள், கிட்டங்கிகள் இந்த வணிக வளாகத்துக்கு இடம்பெயரும். இதனால் நகரில் லாரிகள் போக்குவரத்துக்கு குறையும்.

மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் பணிகளை மக்களிடம் எடுத்துரைப்போம்.

வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினால் மக்களின் தினசரி குடிநீர்ப் பற்றாக்குறை நிவர்த்திசெய்யப்படும் என்பதை அறிந்தோம்.

இவை தவிர தொழில் துவங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் மாநகராட்சி செய்துவருகிறது. இதனால் பிற மாநிலத்தவரும் மதுரையில் தொழில் துவங்குவதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளையும் மாநகராட்சி செய்துவருவது பாராட்டுக்குரியது என்றார்.