தச்சநல்லூர் ரயில்வே கேட்டில் ரூ. 25 கோடியில் மேம்பாலம்

Tuesday, 25 August 2009 06:43 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

தினமணி 25.08.2009

தச்சநல்லூர் ரயில்வே கேட்டில் ரூ. 25 கோடியில் மேம்பாலம்

திருநெல்வேலி, ஆக. 24: திருநெல்வேலி, தச்சநல்லூர் ரயில்வே கேட்டில் ரூ. 25 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாநகராட்சியும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் ரவுண்டானாவில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் ரூ. 25 கோடியில் புதிய மேம்பாலம் அமைப்பதற்குரிய பூர்வாங்கப் பணிகள் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகிறது.

அவற்றைத் தொடர்ந்து மாநகரில் அதிக போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுவது தச்சநல்லூர் ரயில்வே கேட். இந்த ரயில்வே கேட், நாள் ஒன்றுக்கு சுமார் 35 முறை மூடி, திறக்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அப் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன் விளைவாக மாநில நெடுஞ்சாலைத்துறை, தச்சநல்லூர் ரயில்வே கேட்டில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான திட்டத்தை தயார் செய்துள்ளனர். அத் திட்டத்தில் மேம்பாலம் அமைக்க தோராயமாக ரூ. 25 கோடி வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த திட்ட அறிக்கை தற்போது மாநில நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கும், அரசின் அனுமதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

"தமிழகத்தில் உள்ள ரயில்வே கேட்டுகளை ஆளில்லாமல் பராமரிப்பதற்கும், ரயில்வே கேட் மூலம் ஏற்படும் செலவை குறைக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் ரயில்வே கேட்கள் கண்டறியப்பட்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மாநகரில் குலவணிகர்புரம் ரயில்வே கேட், தச்சநல்லூர் ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதில், குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டுவதற்கு ரூ. 25 கோடி நிதி வந்து விட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தச்சநல்லூரில் மேம்பாலம் அமைப்பதற்கு அரசின் அனுமதிக்காக திட்ட அறிக்கையை அனுப்பியுள்ளோம். வரும் மார்ச் மாதத்துக்குள் திட்டத்துக்கு அனுமதி கிடைத்து விடும் எதிர்பார்க்கிறோம்' என நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரி தெரிவித்தார்.

இந்த பாலத்துக்கான நிதியை மாநில நெடுஞ்சாலைத்துறையும், தெற்கு ரயில்வேயும் வழங்கும். வரும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். நிதி கிடைத்தவுடன் பாலம் கட்டுமானப் பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.