பரமக்குடியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

Friday, 24 January 2014 11:56 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

தினமணி            24.01.2014 

பரமக்குடியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ 60.5 லட்சத்தில் 6 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் புதன்கிழமை திறந்து வைத்தார்.

 பரமக்குடி நகர்பகுதியில் குறிப்பிட்ட சிலபகுதிகளில் பொதுமக்களின் தேவைக்கேற்ப குடிநீர் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை சரிசெய்திட ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வாரச்சந்தை பகுதியில் ரூ.10 லட்சத்திலும், முத்தாலம்மன் கோயில் படித்துறை பகுதியில் ரூ.10 லட்சத்திலும், கோகுலர் தெருவில் ரூ.10 லட்சத்திலும், மஞ்சள்பட்டினம் மேற்கு பகுதியில் ரூ. 10 லட்சத்திலும், வைகை நகர் பகுதியில் ரூ.14.50 லட்சத்திலும், எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் ரூ.6 லட்சத்திலும் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டன.

 இவ்விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான எம்.ஏ.முனியசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் டி.என்.ஜெய்சங்கர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் ஜி.தங்கப்பாண்டியன் வரவேற்றார்.

 அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை திறந்து வைத்துப் பேசியதாவது: பரமக்குடி நகராட்சிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 6 இடங்களில் ரூ. 60.5 லட்சத்தில் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 5 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் விரிவாக்கப் பணிக்காக ரூ. 2.50 கோடி ஒதுக்கீடு செய்து செலவிடப்பட்டுள்ளது என அவர் பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள்  பலர் கலந்துகொண்டனர்.