ரிப்பன் கட்டட புனரமைப்புக்கு மேலும் ரூ. 7.35 கோடி

Saturday, 25 January 2014 06:55 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

தினமணி             25.01.2014

ரிப்பன் கட்டட புனரமைப்புக்கு மேலும் ரூ. 7.35 கோடி

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தின் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ. 7.35 கோடி செலவிட மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நோக்குடன், கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் குறித்த காலத்துக்குள் முடிக்கப்படாத காரணத்தினால், இதுவரை கட்டடத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவில்லை. பணிகள் முடிவடைய பல மாதங்களாகும் நிலை உள்ளது. இந்த நிலையில் கட்டட புனரமைப்புப் பணிகளுக்கு கூடுதலாக ரூ. 7.35 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய மதிப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான தீர்மானம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. பணிகள் விரைந்து முடிக்கப்படும்: இந்த தீர்மானத்தின் மீது பேசிய 117-வது வார்டு உறுப்பினர் சின்னய்யன், இப்போது கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. பணிகள் முடிக்கப்படும் தேதி குறித்து இதில் குறிப்பிடப்படவில்லை. புனரமைப்புப் பணிகள் எப்போது முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மேயர் சைதை துரைசாமி, கடுக்காய், வெண் முட்டைக் கரு ஆகியவை கலந்து கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதே முறையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் ஈடுபட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம் கிடைக்கவில்லை. மேலும், பணி செய்யும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் பணியை பிரித்து வழங்கியும், கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டும் விரைந்து முடிக்கப்படும் என்றார்.