ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல்

Wednesday, 04 August 2010 06:12 administrator நாளிதழ்௧ள் - பெ௫ந்திட்டம்
Print

தினமலர்   04.08.2010

ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல்

நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பு இல்லாத காரணத்தால், ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், விதிமுறைகளை மீறி பிரமாண்ட கட்டடம் கட்டுவது அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் "கட்டட காடுகளை' கட்டுப்படுத்த "மாஸ்டர் பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், விதிமுறை மீறி கட்டடம் கட்டுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான பொதுநல வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், மாநில அரசு நடவடிக்கை எடுக்கவுள்ள நிலையில், ஊட்டி அருகே கிராமப் பகுதிகளில் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி அடுக்குமாடி, ரிசார்ட்ஸ், கல்வி நிறுவனங்களை கட்டுவது அதிகரித்து வருகிறது. இந்த செயல்கள், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பல ஆளும் கட்சியினரை கோடீஸ்வரர்களாக உருவாக்கும் முக்கிய வியாபாரமாக மாறி வருகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர், கட்டட ஒப்பந்ததாரர்களாகவும் மாறி உள்ளனர்.
இவர்களால், ஊட்டி அருகே பேரார், கொல்லிமலை, ஆடாசோலை, முத்தொரை நடுவட்டம், பாலாடா உள்ளிட்ட பல பகுதிகளில், ஊராட்சி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட வரன்முறைகளை மீறி, பிரமாண்ட கட்டடங்கள் உயர்ந்து வருகின்றன. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்ததா, மாநில அரசு அனுமதி கொடுத்ததா என்பது குறித்து கட்டட உரிமையாளர்கள் தெரிவிப்பதில்லை.

குறிப்பிட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டாலும் சரியான பதில் கிடைப்பதில்லை. அரசு அதிகாரிகளையும், ஊராட்சி நிர்வாகிகளையும் பணம் படைத்தவர்கள் "கவனிப்பதே' முக்கிய காரணம் என்ற குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வரிசையில், தற்போது ஊட்டி அருகே தும்மனட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பேரார் பகுதியில் தேயிலை தோட்டத்திற்குள் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கட்டடம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு சமீபத்தில் பல புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிறிய குடியிருப்புக்கான அனுமதியின் பேரில் பெரிய நிறுவனம் அப்பகுதியில் கட்டப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் கட்டடம் கட்ட புவியியல் துறை, மண்வளத்துறை மற்றும் வனத்துறையின் அனுமதி பெறப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து இப்பகுதி ஊராட்சி தலைவர் விஸ்வநாதன் கூறியது: ஊராட்சி பகுதிகளில் கட்டடம் கட்ட 1,300 சதுர அடிக்குள் இருந்தால் அனுமதி கொடுக்கலாம் என்பதன் அடிப்படையில், இந்த பகுதியில் தனியார் கல்லூரி கட்ட ஊராட்சியிடம் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. 139 சதுர அடியில், நூலகம் உட்பட பல்வேறு வகுப்பறை கட்ட தனித்தனியாக அனுமதி பெறப்பட்டுள்ளது. ஏழு மீட்டர் உயரத்துக்குள் கட்டடம் எழுப்ப உள்ளதாகவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. முதல் தளம் கட்டும்போது ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொண்டால் கொடுக்கப்பட்ட அனுமதியை மீறி, விதிமுறை மீறி அந்த கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிய வரும். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். நீலகிரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகங்களின் நடவடிக்கை குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் அதிருப்தி தெரிவித்தும் கூட, விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. இதற்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகம் போதியளவில் கண்காணிப்புகளை மேற்கொள்ளவில்லை என்பதே முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.புகார்களின் அடிப்படையில், கட்டட ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள், கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டும் எடுத்து, கட்டட உரிமையாளர்களுக்கு சாதகமான அறிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பித்து வருவதும், இத்தகைய கட்டடங்கள் உயர்வதற்கு காரணிகளாக அமைந்து வருகிறது. துணை முதல்வர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மலை மாவட்டத்தின் தற்போதைய அழகையாவது பாதுகாக்க முடியும் என்பதே உள்ளூர் மக்களின் கருத்து.

-நமது நிருபர்-