குடந்தை நகரின் "மாஸ்டர் பிளானை' மறுசீராய்வு செய்ய உத்தரவு

Wednesday, 08 December 2010 09:56 administrator நாளிதழ்௧ள் - பெ௫ந்திட்டம்
Print

தினமணி              08.12.2010

குடந்தை நகரின் "மாஸ்டர் பிளானை' மறுசீராய்வு செய்ய உத்தரவு

கும்பகோணம், டிச. 8: கும்பகோணத்தில் தற்போதுள்ள மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து முழுமைத் திட்டத்தின் கீழ் "மாஸ்டர் பிளானை' மறுசீராய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் நகர் ஊரமைப்பு திட்டத்தின் மாநில இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல்.

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:

நிலப் பயன் மாற்றம், கட்டடம், பலமாடி கட்டடம், மனைப் பிரிவு, தொழில்சாலை கட்டடம் ஆகியவற்றில் அனுமதி பெறுவதில் உள்ள இடர்பாடுகளை களைவதற்கான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கும்பகோணம், தஞ்சையில் நடைபெறவுள்ளது.

கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள், 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடங்கள் கட்டக் கூடாது என்பது அரசு விதியாகும். இந்த விதியை மீறி கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தையும் இடிப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நஞ்சை தரிசு நிலத்தில் மனைப்பிரிவு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலை பெற வேண்டும். மீறினால் சட்டப்பிரிவு 56, 57-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர் திட்ட குழுமத்தின் விதிகளை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதற்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

4 ஆயிரம் சதுர அடி வரை கட்டடம் கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்பிடமும், 15 ஆயிரம் சதுர அடி வரை கட்ட உள்ளுர் திட்ட குழுமத்திலும், அதற்கு மேல் உள்ளவர்கள் மாநிலத் தலைமை அலுவலகத்திலும் அனுமதி பெற வேண்டும்.

அனுமதியோ அல்லது மறுப்போ உள்ளூர் திட்டக் குழுமத்தில் 30 நாள்களுக்குள்ளும், தலைமை அலுவலகத்தில் 45 நாள்களுக்குள்ளும் பரிசீலித்து தெரிவிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கும்போது வடிகால் வசதி வெளியேறும் வகையில் மனைப் பிரிவுகள் அமைக்கப்படுகின்றன. எனவே, வடிகால் வசதி உள்ளதா என்பதை பார்த்து மனைகளை வாங்க வேண்டும்.

2005-ல் கும்பகோணம் நகரத்திற்கான (மாஸ்டர் பிளான்) முழுமைத் திட்டம் வெளியிடப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் முழுமைத் திட்டத்தின் கீழ் மாஸ்டர் பிளானை மறுசீராய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சாலை மேம்பாட்டுக்காக அரசு ஒதுக்கியுள்ள ரூ.ஆயிரம் கோடியில், ரூ.350 கோடி திட்ட குழுமம் சார்பில், சாலை மேம்பாட்டிற்காக அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

முன்னதாக, குடந்தை உள்ளூர் திட்ட குழும அலுவலகத்தில் பங்கஜ்குமார் பன்சல் தலைமையில், இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலப்பயன் மாற்றம், சிறப்பு கட்டடம், பலமாடி கட்டடம், மனைப்பிரிவு, தொழில்சாலை கட்டடம் ஆகியவற்றில் அனுமதி பெறுவதில் உள்ள இடர்பாடுகளைக் களைவதற்கான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள், பொறியாளர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளித்தனர்.

உதவி இயக்குநர்கள் சிவப்பிரகாசம், வசந்தி, திட்ட உதவியாளர் மாரியப்பன், மூத்த ஆராய்ச்சி உதவியாளர் சீனிபாண்டியன், கண்காணிப்பாளர் அப்துல்சலாம்சாகிப், வரைவாளர் குணசீலன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.