மாநகரில் மாசு தொழில்களுக்கு தடை வார்ப்பட தொழிலுக்கு 2 துணை நகரம் : மாஸ்டர் பிளானில் பரிந்துரை

Thursday, 03 February 2011 06:34 administrator நாளிதழ்௧ள் - பெ௫ந்திட்டம்
Print
தினகரன்      03.02.2011

மாநகரில் மாசு தொழில்களுக்கு தடை வார்ப்பட தொழிலுக்கு 2 துணை நகரம் : மாஸ்டர் பிளானில் பரிந்துரை

கோவை, பிப் 3:

சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மாநகர குடியிருப்பு பகுதியில் அமைக்க தடை விதிக்கவேண்டும். வார்ப்பட தொழிலுக்கு மாநகருக்கு வெளியே அரசூர், குன்னத்தூர் ஆகிய இடங்களில் தனியே துணை தொழில் நகரங்கள் அமைக்கவேண்டும் என்று கோவை மாஸ்டர் பிளான் வரைவு திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜவுளி, பொறியியல் சார் தொழில்களில் கோவை மாநகரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயத்தில் சுற்றுச்சூழல் பிரச்னைகள் இந்த தொழில்களை பாதிக்கும் முக்கிய அம்சங்களாக உள்ளன. 2021ல் கோவையின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நேற்று வெளியிடப்பட்ட மாஸ்டர் பிளானில் பல்வேறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற மேம்பாட்டுக்கான பரிந்துரையில் ஒரு நகரில் தொழில் பயன்பாட்டுக்கான நிலம் ஒதுக்கீடு 12 சதவீதமாக இருக்கவேண்டும். ஆனால், கோவையில் தொழில் பயன்பாட்டு ஒதுக்கீடு தற்போது 7.79 சதவீதமாக உள்ளது. விவசாய பயன்பாட்டுக்கான நிலம் தற்போது மாநகர எல்லையில் 1,529 ஹெக்டேராகவும், உள்ளூர் திட்டக்குழும பகுதியில் 6,635 ஹெக்டேராகவும் உள்ளது. இதை மேலும் குறையாமல் பாதுகாக்கவேண்டும்.

இதை வரும் 2021க்குள் 12 சதவீதமாக அதிகரிக்கவேண்டும். அதே சமயத்தில் தொழில் வளர்ச்சிக்காக தனி மனிதர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் தவிர்ப்பதும், அதற்கேற்ப தொழில் கட்டமைப்புகளுக்கு மாற்று திட்டங்களின் அவசியமும் மாஸ்டர் பிளான் பரிந்துரை செய்துள்ளது.

கோவை மாநகரின் மொத்த நிலப்பரப்பில் தொழில் செய்வதற்கான நிலங்கள் பயன்பாடு 721.38 ஹெக்டேராகவும், மாநகருக்கு வெளியே உள்ளூர் திட்டக்குழும எல்லைக்குட்பட்ட பகுதியில் தொழிற்சாலை நிலப்பயன்பாடு 9215 ஹெக்டேராகவும் இருக்கவேண்டும். இதில் கட்டுப்பாட்டுக்குட்பட்ட தொழிற்சாலைகள், பொது தொழிற்சாலைகள், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு என்று தனி இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏற்ற பகுதிகளாக கருமத்தம்பட்டி, சோமனூர், சூலூர், அன்னூர், வெள்ளானைப்பட்டி, அரசூர், ஒத்தக்கால்மண்டபம், செட்டிபாளையம் ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் கட்டுப்பாட்டுக்குட்பட்ட தொழிற்சாலைகள்(கண்ட்ரோல் இண்டஸ்ட்ரீஸ்), பொது தொழிற்சாலைக்கான இடங்கள் ஆகும். சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகம் தரக்கூடிய வார்ப்பட தொழில்களுக்கு(பவுண்டரி) தனியே துணை தொழில் நகரங்கள் அவசியம். வார்ப்பட தொழில்களின் தற்போதைய சூழல், கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் அவிநாசி ரோட்டில் அரசூர், சத்தியமங்கலம் ரோட்டில் குன்னத்தூர் ஆகியன வார்ப்பட தொழில் நகரங்கள் அமைப்பதற்கு ஏற்ற இடங்கள். இங்கு வார்ப்பட தொழில்பேட்டைகள் அமைக்கவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கு நிலம் தேவை உள்ளது. அதற்கு ஏற்ப நிலம்பூர் பகுதியில் போதிய நிலங்களை கையகப்படுத்தி நில வங்கி அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.