ராஜபாளையத்தில் 6 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

Thursday, 27 August 2009 07:44 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமணி 27.08.2009

ராஜபாளையத்தில் 6 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

ராஜபாளையம், ஆக. 26: ராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் 6 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் புதன்கிழமை ராஜபாளையத்தில் தெரிவித்தார்.

ராஜபாளையம் நகர்ப் பகுதியில் தற்போது 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும், பல பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்காமல் மக்கள் அடிக்கடி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதன்கிழமை ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்துக்கு ஆய்வு செய்ய வந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இதுகுறித்து தெரிவித்ததாவது:

இந் நகரில் குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர ரூ. 63 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இப் பகுதிக்குக் கிடைக்கும் குடிநீரோடு தனியார் கிணறுகளில் தினமும் 100 லாரி டேங்கர் தண்ணீர் எடுத்து விநியோகிக்கப்படும்.

இந்த வசதியில் இனி 6 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்கும். ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி குடிநீர் வழங்க தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன். ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசி ரோடுக்கு 60 அடி அகலத்தில் இணைப்புச் சாலை விரைவில் அமைக்கப்படும். ராஜபாளையத்துக்கு மேற்கே 6-வது மைல் குடிநீர்த் தேக்கத்துக்கு தண்ணீர் கூடுதலாக வர வனத் துறையினரிடம் அனுமதி பெற்று தடுப்பணை கட்டப்படும் என்றார்.

உடன், நகராட்சிப் பொறியாளர் குமரகுரு மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.