பாலித்தீன் குப்பைக்கு விடிவு :"சூன்யா' திட்டம் விஸ்தரிப்பு

Monday, 02 December 2013 11:55 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமலர்          02.12.2013

பாலித்தீன் குப்பைக்கு விடிவு :"சூன்யா' திட்டம் விஸ்தரிப்பு

கோவை : கோவை மாநகராட்சியில் ஆர்.எஸ்.புரத்தை தொடர்ந்து, மேலும் நான்கு வார்டுகளில் குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் ஆர்.எஸ். புரம் பகுதிகளை உள்ளடங்கிய 23வது வார்டில், குப்பையில்லா நகரத்தை உருவாக்கும் "சூன்யா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அக்., 2ல், "சூன்யா' திட்டத்தில், மக்கள் ஒத்துழைப்போடு குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் பணி துவங்கப்பட்டது. வார்டிலுள்ள 21 வீதிகளில், மொத்தமுள்ள 4,100 குடியிருப்பிலும் துப்புரவு பணியாளர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வீட்டுக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டாமல், சணல் பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனியாக சேகரிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு சணல் பைகளும், ஒரு பிளாஸ்டிக் தொட்டியும் வழங்கப்பட்டன. துப்புரவு தொழிலாளர்கள் வரும்போது, தரம்பிரித்து சேகரித்து வைத்திருக்கும் குப்பையை ஒப்படைக்க வேண்டும் என, பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.வீடுகளில் சேகரிக்கும் பாலித்தீன் கழிவுகளை துப்புரவு தொழிலாளர்கள் தனியாக சேகரித்து வைத்து, ஐ.டி.சி., என்ற தனியார் நிறுவனத்திடம், கிலோ மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். பாலித்தீன் கழிவை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை துப்புரவு தொழிலாளர்கள் ஊக்கத்தொகையாக பகிர்ந்து கொள்கின்றனர்.

மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:

கடந்த இரண்டு மாதத்தில், 6.1 டன் பாலித்தீன் கழிவு சேகரித்து விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம், துப்புரவு தொழிலாளர்களுக்கு கணிசமான ஊக்கத்தொகை கிடைத்துள்ளது. பொதுமக்களும் விழிப்புணர்வு பெற்றுள்ளதால், பாலித்தீன் கழிவை தரம் பிரித்து ஒப்படைக்கின்றனர். இதேபோன்று, ஒவ்வொரு வார்டிலும் பாலித்தீன் கழிவை தரம் பிரித்து சேரித்து, துப்புரவு தொழிலாளர்கள் ஊக்கத்தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய மண்டலத்தில் 51வது வார்டு, வடக்கு மண்டலத்தில் 44, கிழக்கு மண்டலத்தில் 67, தெற்கு மண்டலத்தில் 90வது வார்டுகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மூன்று நாளில் ஆறு டன் பாலித்தீன் குப்பை சேகரிக்கப்பட்டது.

படிப்படியாக ஒவ்வொரு வார்டிலும் பாலித்தீன் கழிவு தரம் பிரித்து சேகரிக்கும் திட்டம் துவங்கப்படும். வரும், ஏப்ரல் மாதத்துக்குள் தினமும் 50 டன் பாலித்தீன் கழிவு சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு டிசம்பருக்குள் அனைத்து வார்டிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆண்டுக்கு 2,500 டன் பாலித்தீன் கழிவு, குப்பை கிடக்குக்கு கொண்டு வரப்படாமல், துப்புரவு தொழிலாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இவ்வாறு, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார். மேலும் 4 வார்டுகளில் அமல்.

ஒரு லட்சம் செலவாகும்!

கமிஷனர் லதா கூறுகையில், ""பாலித்தீன் கழிவுகளை வீடுகளில் சொந்த பொறுப்பில் தரம் பிரித்து வைக்க வேண்டும். கழிவுகளை துப்புரவு தொழிலாளர்கள் சேகரிப்பதற்கு, மாநகராட்சி மூலம் 50 கிலோ கொள்ளளவு கொண்ட பை வழங்கப்படும். ஒரு வார்டுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைகள் வழங்கப்படும். ஒட்டுமொத்த மாநகராட்சியிலும் குப்பை சேகரிக்கும் பைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும். ஆனால், குப்பை தரம் பிரிப்பு, போக்குவரத்துக்கு செலவிடப்படும் பல லட்சம் ரூபாய் சேமிக்கப்படும்'' என்றார்.