பல்லாவரம் நகராட்சியில் விரைவில் தொடக்கம்: உணவு கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்

Thursday, 02 January 2014 09:24 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினகரன்             02.01.2014

பல்லாவரம் நகராட்சியில் விரைவில் தொடக்கம்: உணவு கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்

தாம்பரம், : பல்லாவரம் நகராட்சியில் உணவு கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக 22வது வார்டு ஐஸ்வர்யா நகரில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ90 லட்சத்தில் இதற்கான பணி நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின்படி தினமும் 420 முதல் 440 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும். இதன் மூலம் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 480 தெரு விளக்குகள் எரிய வைக்கப்படும். ஒவ்வொரு விளக்கும் 40 வாட்ஸ் கொண்டதாக இருக்கும்.

இதற்கு தினமும் 5 டன் உணவு கழிவு தேவைப்படும். பல்லாவரம் நகராட்சியில் தினமும் 110 டன் குப்பை சேருகின்றன. இதில் 60 சதவீதம் மக்கும் குப்பை. இதில் 20 சதவீதம் உணவு கழிவுகள். உணவு கழிவுகள் அல்லாதவற்றை நீக்கி, மீதியுள்ள உணவு கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படும்.

பல்லாவரம் நகரத்தில் உள்ள 42 வார்டுகளில் 18 பெரிய ஓட்டல்கள், 17 திருமண மண்டபங்கள், 34 சிறிய ஓட்டல்கள் உள்ளன. மேலும் தள்ளு வண்டி, சிறிய டிபன் கடைகளும் நடத்தப்படுகின்றன. ஓரிரு வாரங்களில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் மின்சார சிக்கனம், பணம் சேமிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவு கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆற்காடு நகராட்சியில் முதலில் மாதிரியாக தொடங்கப்பட்டது. இந்த திட்டம் வெற்றி பெற்றது. இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த பணி ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, காஞ்சிபுரம், கடலூர் உள்பட பல நகராட்சிகளிலும் செயல்படுகிறது.