விசில் அடித்து குப்பை பெறும் திட்டம் : மாநகராட்சி பகுதியில் அறிமுகமாகிறது

Saturday, 01 February 2014 11:04 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமலர்             01.02.2014

விசில் அடித்து குப்பை பெறும் திட்டம் : மாநகராட்சி பகுதியில் அறிமுகமாகிறது

திருப்பூர் : மாநகராட்சி பகுதியில், வீடு வீடாக வந்து, விசில் அடித்து குப்பை பெறும் திட்டம், வரும் 2ம் தேதி முதல் துவங்க உள்ளது. முதல்கட்டமாக, இரு மண்டலங்களில் மட்டும் தனியார் நிறுவனம் மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சியில், இரண்டாவது மற்றும் மூன்றாவது மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வரும் 2ல், எம்.எஸ்., நகரில் இத்திட்டம் துவங்கப்பட உள்ளது. இப்பணி மேற்கொள்ளப்படும் விதம் குறித்து, அந்நிறுவன நிர்வாக இயக்குனர் வெங்கடேஸ்வரன், படக்காட்சி மூலம் விளக்கினார். மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், மண்டல மற்றும் நிலைக்குழு தலைவர்கள், சுகாதார பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

முதல்கட்டமாக, 781 துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 600 தள்ளுவண்டிகள் மூலம் 4 பச்சை (மக்காத குப்பை), 2 சிவப்பு (மக்கும் குப்பை) நிற கண்டெய்னர் வைத்து, வீடு வீடாகச் சென்று விசில் அடித்து குப்பை சேகரிப்பர். அவை பகுதிவாரியாக உள்ள தலா 1100 லி., கொள்ளளவு கொண்ட குப்பை தொட்டிகளில் சேகரிக்கப்படும். பின், அவை பகுதிவாரியாக 8 கியூபிக் (8 வண்டிகள்) மற்றும் 14 கியூபிக் காம்பாக்டர் (4 வண்டிகள்) பொருத்திய வாகனங்கள் மற்றும் 10 டிப்பர் ஆட்டோக்கள் மூலம் கொண்டு செல்லப்படும். இவை தவிர, லோடர், கால்வாய் சுத்தம் செய்யும் அதிநவீன கிரேன் ஆகியனவும் பயன்படுத்தப்பட உள்ளன.

வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

ஊழியர்கள் வருகை பயோமெட்ரிக் முறையிலும், வாகனங்கள் செல்வது ஜி.பி.ஆர்.எஸ்., முறையிலும் கண்காணிக்கப்படும். குப்பை தொட்டிகளில் ஆர்.எப்.ஐ.டி., முறையில் குப்பை போடுதல் மற்றும் நிரப்பும் பணியும், சுத்தம் செய்யப்பட்ட வீதிகளில், கண்காணிப்பாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து, படம் பிடித்தும் "ஆன்-லைன்' மூலம் பதிவு செய்யப்படும். மாநகராட்சி கமிஷனர் அறையிலிருந்தபடி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஊழியர் பணியாற்றுவர். காலை 6.00 முதல் பகல் 2.00 மணி வரை முழு அளவிலும், 2.00 முதல் 5.00 மணி வரை ரிசர்வ் ஊழியர்களும் பணியில் இருப்பர். மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்கள் இரவிலும் சுத்தம் செய்யப்படும், என்றார்.