குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் நடைமுறைக்கு வந்தாச்சு! முதல் கட்டமாக 2 மண்டலங்களில் அமல்

Tuesday, 04 February 2014 09:19 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமலர்             04.02.2014

குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் நடைமுறைக்கு வந்தாச்சு! முதல் கட்டமாக 2 மண்டலங்களில் அமல்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில், முதல்கட்டமாக, இரண்டு மண்டலங்களுக்கு உட்பட்ட, 30 வார்டுகளில், தனியார் மூலமாக குப்பை அள்ளும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது. இத்திட்டத்தில், 250 டன் குப்பை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில், 600 தள்ளுவண்டிகள், 800 குப்பை பெட்டிகள், 10 டிப்பர் ஆட்டோக்கள், 12 காம்பாக்டர் வாகனங்கள், வாகன ஓட்டுனர்கள் 32 பேர், உதவியாளர்கள் 28 பேர், துப்புரவு பணியாளர்கள் 781 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில், இரண்டு மற்றும் மூன்றாவது மண்டலங்களுக்கு உட்பட்ட, 16 முதல் 45வது வார்டு வரையிலான 30 வார்டு பகுதிகளில், தனியார் நிறுவனம் மூலமாக குப்பை அள்ளும் பணி நேற்று துவங்கியது. தனியார் நிறுவன ஊழியர்கள், தள்ளுவண்டிகளுடன் வீடு வீடாக வந்து தினமும் குப்பை சேகரிப்பர். காலை 6.00 மணிக்கு முன்பாக வந்து, விசில் அடித்து குப்பை சேகரிக்கப்படும். சேகரிக்கப்படும் குப்பை, பாறைக்குழிகளில் கொட்டப்படும்.

திருநீலகண்டபுரத்தில் நேற்று நடந்த விழாவில், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் துவக்கி வைத்தார். மேயர் விசாலாட்சி தலைமை வகித்தார். துணை மேயர் குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், சுகாதார நிலைக்குழு தலைவர் பாலு முன்னிலை வகித்தனர்.மாநகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:

மாநகராட்சியில் போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், பொது சுகாதார பணியை மேற்கொள்வது சவாலாக இருக்கிறது. மகளிர் குழுக்கள் மூலமாக சுகாதார பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சியில் இருந்த குழு பெண்கள், தனியார் நிறுவனத்தில் விண்ணப்பித்து, வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

இரண்டு மற்றும் மூன்றாவது மண்டலங்களில் உள்ள துப்புரவு பணியாளர்கள் 839 பேர், மற்ற இரண்டு வார்டுகளுக்கு பிரித்து அனுப்பப்படுவர். தனியார் நிறுவனம் குப்பையை அகற்ற ஒப்பந்தம் செய்திருந்தாலும், தொழிலாளர்கள் வருகை பதிவேடு, இ.எஸ்.ஐ., - பி.எப்., உள்ளிட்ட சலுகை வழங்குவது, வாகனங்கள், குப்பை தொட்டி இயக்கம் குறித்து கண்காணிக்கப்படும்.

திருப்பூர் மாநகராட்சியில் உருவாகும் 500 டன் குப்பையில், 250 டன் குப்பை தனியாரால் அகற்றப்படும். ஒப்பந்தம் செய்துள்ளபடி, ஒரு டன் குப்பைக்கு 1,449 ரூபாய் என்ற அடிப்படையில், தனியார் நிறுவனத்துக்கு கட்டணம் வழங்கப்படும்.

வாகன இயக்கம், தொழிலாளர் கூலி உள்ளிட்ட அனைத்து செலவுகளும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தது. குப்பை லாரிகளை எடை போட, சில எடை நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கும் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்படும். லாரிகளில் பொருத்தப்படும் தொழில்நுட்ப கருவியால், எடை மேடையில் உள்ள லாரி விவரம், எடை விவரம் உடனுக்குடன் மாநகராட்சிக்கு, "ஆன்-லைன்' மூலமாக தெரியவரும். பணி சரிவர நடைபெறா விட்டால், கட்டணம் குறைத்து வழங்கப்படும்.

நாளை (இன்று) முதல் அந்தந்த வாகனங்கள், ஒப்படைக்கப்பட்ட இடங்களில் இயங்கத் துவங்கும். மொத்தம் 600 தள்ளுவண்டிகள், 800 குப்பை பெட்டிகள், 10 டிப்பர் ஆட்டோக்கள், 12 காம்பாக்டர் வாகனங்களும், வாகன ஓட்டுனர்கள் 32 பேர், உதவியாளர்கள் 28 பேர், துப்புரவு பணியாளர்கள் 781 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதனால், குப்பை அள்ளும் பணி வேகமாக நடக்கும். கட்டணமில்லா தொலைபேசி வசதி ஏற்படுத்த இருப்பதால், குப்பை அள்ளும் பணியில் பிரச்னை இருந்தால், பொதுமக்கள் புகார் செய்யலாம். இவ்வாறு, கமிஷனர் செல்வராஜ் கூறினார்.

கண்காணிப்பு

குப்பை சேகரிக்கும் பெட்டிகளில்,"ரேடியோ பிரீகுவன்ஸி' ஐ.டி., பொருத்தப்பட்டுள்ளதால், குப்பை தொட்டியை கையாளும் நடவடிக்கைகளை, ஆன்-லைனில் கண்காணிக்க முடியும். குப்பை தொட்டி உள்ள பகுதிகள் சிவப்பு விளக்குகளாக மானிட்டரில் தெரியும்.

குப்பை நிரம்பி பெட்டி எடுத்துச்செல்லும்போது, அப்பகுதி பச்சை நிறமாக மாறும். பச்சை நிறமாக மாறாத பகுதிகளில் குப்பை அகற்றப்படவில்லை என்பது எளிதில் தெரியவரும். வாகனங்களிலும் ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதால், வாகனங்கள் எந்த பகுதியில் இயங்குகின்றன என்பதை கமிஷனர் அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.