திடக்கழிவு சேவை கட்டணத்தை தவணை முறையில் செலுத்தலாம் வணிகர்கள் கூட்டத்தில் ஆணையர் தண்டபாணி அறிவிப்பு

Thursday, 13 February 2014 06:07 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினத்தந்தி                13.02.2014

திடக்கழிவு சேவை கட்டணத்தை தவணை முறையில் செலுத்தலாம் வணிகர்கள் கூட்டத்தில் ஆணையர் தண்டபாணி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள திடக்கழிவு சேவை கட்டணத்தை வியாபாரிகள் தவணை முறையில் செலுத்தலாம் என ஆணையர் தண்டபாணி கூறினார்.

சேவை கட்டணம் விதிப்பு

திருச்சி மாநகராட்சியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு திடக்கழிவை அகற்றுவது தொடர்பாக சேவை கட்டணம் விதித்துள்ளது. இந்த தொகை ஒவ்வொரு கடைக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண தொகை கடந்த ஏப்ரல் 1–ந் தேதி முதல் முன் தேதியிட்டு வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண தொகை அதிகமாக இருப்பதாகவும், இந்த தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் அச்ச, அருவருக்கத்தக்க தொழில்களுக்காக வழங்கப்படும் உரிமம், பெறுவதற்கு வருகிற 14–ந்தேதி கடைசி நாள் எனவும், இந்த உரிமம் பெறவோ? அல்லது புதுப்பிக்கவோ? வேண்டுமானால் அதற்கு முன்னதாக மாநகராட்சி நிர்ணயித்துள்ள திடக்கழிவு சேவை கட்டணத்தை முழுவதுமாக செலுத்துபவர்களுக்கு உரிமம் வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

வியாபாரிகள் கோரிக்கை

இந்த அறிவிப்பு வணிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்க கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் நடந்தது. பேரமைப்பின் மாநில பொருளாளர் கோவிந்தராஜூலு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பேசிய வணிகர்கள் பலர், திடக்கழிவு சேவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்றனர். மேலும் அச்ச, அருவருக்கத்தக்க தொழில்களுக்காக உரிமம் பெறும் போது திடக்கழிவு கட்டணத்தை செலுத்த வலியுறுத்தக்கூடாது, உரிமம் பெற 14–ந்தேதி கடைசி என்பதை நீட்டிக்க வேண்டும். நடைபாதை வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்து மாநகராட்சி ஆணையர் தண்டபாணி பேசியதாவது:–

தவணை முறையில்...

திருச்சி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திடக்கழிவு சேவை கட்டணம் மூலம் மாநகராட்சிக்கு ரூ.72 லட்சம் முதல் ரூ.73 லட்சம் வரை கிடைக்கும். இந்த கட்டணத்தை நிறுத்தி வைக்க அதிகாரம் கிடையாது. ஒரு ஆண்டு கட்டணத்தை செலுத்தி விட்டு மீதித்தொகையை தவணை முறையில் செலுத்துங்கள்.

திடக்கழிவு சேவை கட்டணம் அதிகமாக இருக்கிறது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை மாநகராட்சி மாமன்ற பட்ஜெட் கூட்டத்தில் பொருளாக வைக்கப்பட்டு கட்டணத்தை குறைக்கவேண்டுமானால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதற்கு 6 மாத கால அவகாசம் ஆகும். எனவே தற்போது திடக்கழிவு சேவை கட்டணத்தை வியாபாரிகள் தவணை முறையில் செலுத்தலாம்.

14–ந்தேதி கடைசி நாள்

அச்ச, அருவருக்கத்தக்க தொழில்களுக்கான உரிமம் பெறவோ? புதுப்பிக்கவோ? 14–ந்தேதி கடைசி நாளாகும். இந்த தேதியை நீட்டிக்க முடியாது. எனவே இதற்கான உரிமம் பெறுபவர்கள், திடக்கழிவு சேவைக்கட்டணத்தை செலுத்த வேண்டும். நடைபாதை வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி தரப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் தமிழ்செல்வன், நிர்வாகி உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.