காய்கறிக் கழிவுகளில் மின்சார உற்பத்தி: பொள்ளாச்சி நகராட்சியில் துவக்கம்

Thursday, 13 February 2014 07:41 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமணி             13.02.2014

காய்கறிக் கழிவுகளில் மின்சார உற்பத்தி: பொள்ளாச்சி நகராட்சியில் துவக்கம்

பொள்ளாச்சி நகராட்சியில் ரூ. 90 லட்சம் மதிப்பில் காய்கறிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் கிருஷ்ணகுமார் பூமி பூஜையை துவக்கி வைத்தார். ஆணையர் சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார்.

  பொள்ளாச்சி நகராட்சி 13.87 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் 90 ஆயிரம் பேர் வசித்துவருகின்றனர். நகராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் 60 டன் குப்பைகள் உரக்கிடங்கில் சேர்க்கப்படுகின்றன. இதில், 42 டன் குப்பைகள் மக்கும் குப்பைகளாகவும், 12 டன் குப்பைகள் மக்காத குப்பைகளாகவும் பிரிக்கப்படுகின்றன.

 இது தவிர காந்தி சந்தை, திரு.வி.க. சந்தை, தேர்நிலை சந்தை, உழவர் சந்தை, பூ மார்க்கெட், உணவு விடுதிகள் மற்றும் பழக்கடைகள் ஆகியவற்றில் இருந்து தினமும் 10 டன் காய்கறிக்கழிவுகள், பழக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்படும் 10 டன் காய்கறிக்கழிவுகள், பழக்கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை எரிவாயுவில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது.

 தயாரிக்கப்படும் மின்சாரம் நகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2013-14 ஆண்டில் ரூ. 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்து நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், நகராட்சியில் பல டன் காய்கறி, பழக்கழிவுகள் கிடைப்பதால், அதை வீணாக்காமல் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டோம். தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. இந்த திட்டம் பல்வேறு நகராட்சி, பேரூராட்சிகளுக்கு முன்மாதிரியாக அமையும் என்றார்.

நகராட்சிபொறியாளர் ராஜா, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ்ராஜா, வசந்த் உள்பட பலர்  பங்கேற்றனர்.