மறுசுழற்சிக்கு உதவாத 'பிளாஸ்டிக்' பைகள் : திடக்கழிவு மேலாண்மைக்கு சவால்

Friday, 26 May 2017 12:04 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமலர்          26.05.2017

மறுசுழற்சிக்கு உதவாத 'பிளாஸ்டிக்' பைகள் : திடக்கழிவு மேலாண்மைக்கு சவால்

கோவை: பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பைகளை, மறுசுழற்சி செய்ய முடியாத தால், திடக்கழிவு மேலாண்மை பணியில் ஈடுபடும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள பல நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி கள் திடக்கழிவு மேலாண்மை பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ஊழியர்கள் பயிற்சி பெற, லட்சக்கணக்கில் அரசு செலவிடுகிறது.

தரம் பிரித்தல் : உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, காய்கறி கழிவுகளை, மட்கும் மற்றும் மட்காத குப்பையாக தரம் பிரித்து, மட்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்து வருகின்றன. சில வகை பிளாஸ்டிக் பொருட்கள், இயந்திரத்தால் துாளாக்கப்பட்டு, அவை சாலை அமைக்க, தாருடன் கலக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் தார் கலவை மூலம் போடப்படும் சாலையின் உறுதித் தன்மை, வலுவாக இருக்கும் என, கூறப்படுகிறது. இந்நிலையில், மசாலா கம்பெனிகள் உட்பட, பல நிறுவனங்கள் பல வண்ணங்களில், பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கின்றன. மறுசுழற்சிக்கு உதவாத அத்தகைய பிளாஸ்டிக் பைகள், உள்ளாட்சி அமைப்புகளின் குப்பை குழிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை செய்யப்படும் இடங்களில், குவியலாக சேர்த்து வைக்கப்பட்டு உள்ளன.
பயன்படாது

உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:மசாலா பாக்கெட்டுகள் உட்பட, பல வண்ணங்களில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளின் உட்புறம், 'சில்வர் பூச்சு' இருப்பதால், அவற்றை மறுசுழற்சிக்கு, நிறுவனங்கள் வாங்குவதில்லை. இதனால், அவற்றை மேலாண்மை செய்வது, எங்களுக்கு கடினமாக உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் நிறுவனங்கள், மறுசுழற்சிக்கு ஏற்ற வகையில், பிளாஸ்டிக் பைகளை தயாரித்தால், அவற்றை மேலாண்மை செய்வது எளிதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.