2011 - 16ல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு செலவு...ரூ. 1,807 கோடி! குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் நம்பிக்கை

Friday, 09 June 2017 11:01 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமலர்     09.06.2017

2011 - 16ல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு செலவு...ரூ. 1,807 கோடி! குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் நம்பிக்கை


''பெருங்குடி, கொடுங்கையூரில் உள்ள குப்பையைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கவும், சென்னையில் தினமும் சேகரமாகும் 5,400 டன் குப்பை மூலம் மின்சாரம் தயாரிக்கவும், தனித்தனியாக திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன,'' என, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கூறினார்.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து பெற, இரண்டு வண்ணங்களில் குப்பை தொட்டிகள், மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகை வளாகத்தில், நேற்று நடந்தது. விழாவில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பேசியதாவது:ரூ.303 கோடிகடந்த, 2011 - 16ம் ஆண்டுகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்காக, 1,807 கோடி ரூபாயை, அரசு செலவழித்துள்ளது. அதற்கு முந்தைய, ஐந்து ஆண்டுகளுக்கு, தி.மு.க., அரசு, வெறும், 303 கோடி ரூபாய் மட்டுமே, திடக்

கழிவு மேலாண்மை பணிகளுக்கு செலவழித்தது.

சென்னையில், நாள் ஒன்றுக்கு, 5,400 டன் குப்பையும், இதர மாநகராட்சி, நகராட்சிகளில் சேர்த்து, 7,597 டன் குப்பையும், பேரூராட்சிகளில், 1,967 டன் குப்பையும், ஊராட்சி பகுதிகளில், 2,340 டன் குப்பை என, தமிழகம் முழுவதும், மொத்தம், 17,304 டன் குப்பை சேகரமாகிறது.

குப்பை கழிவுகளை கையாள்வது சவாலான பணி. ஊரக பகுதிகளிலும், பேரூராட்சிகளிலும் சிறிய அளவில் குப்பை சேகரமாவதால், அவற்றை மறு சுழற்சி செய்யும் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், 70 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னையில், 5,400 டன் குப்பை தினசரி கையாள்வது பெரும் சவாலாகும். பல நிறுவனங்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை கொண்டு வருகின்றன. ஆனால், அந்த திட்டங்கள், சென்னையில் நடைமுறை சாத்தியம் இல்லாதவையாக உள்ளது.

மின்சாரம்

தற்போது குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, மாநகராட்சி செயல்படுத்த

உள்ளது. இந்த திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில், முதல்வர் ஒப்புதல் பெற்று, கொடுங்கையூர், பெருங்குடியில் சேகரமாகியுள்ள குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும், சென்னையில் தினமும் சேகரமாகும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும், தனித்தனியாக திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நகராட்சி நிர்வாக துறை செயலர், ஹர்மேந்தர் சிங் பேசுகையில், ''சென்னையில் 70 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில், குப்பை அகற்றும் பணியில், 18 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே ஈடுபட்டு

உள்ளனர்; ''இந்த எண்ணிக்கை போதாது. இதனால் பொதுமக்கள், தங்கள் வீடுகளிலேயே, குப்பையை தரம் பிரித்து வழங்க முன்வர வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெய

குமார், பெஞ்ஜமின், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சந்திரகாந்த் காம்ளே, காக்கர்லா உஷா, கார்த்திகேயன், பிரகாஷ், மகரபூஷ்ணம், அருண்ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். -நமது நிருபர் -