சுற்றுச்சூழலைப் பாதிக்காத கட்டடம்: விரைவில் வருகிறது புதிய சட்டம்?

Thursday, 30 July 2009 05:16 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print

தினமணி 30.07.2009

சுற்றுச்சூழலைப் பாதிக்காத கட்டடம்: விரைவில் வருகிறது புதிய சட்டம்?

சென்னை, ஜூலை 29: சுற்றுச்சுழலைப் பாதிக்காத வகையில் கட்டங்களை கட்டுவதற்கான புதிய சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இந்தியாவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பு 30 கோடியாக இருந்த மக்கள் தொகை இப்போது 110 கோடியை தாண்டிவிட்டது. இதே வேகத்தில் மக்கள் தொகை வளருமேயானால் அடுத்த 25 ஆண்டுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பெற்றுவிடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

விளைநிலங்கள் அழிப்பு...: மக்கள் தொகை எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறதோ அதே வேகத்தில் விளைநிலங்கள், காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்களாக மாறி வருகின்றன. இதனால் இயற்கை நாசமாவதுடன் பருவமழையும் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

என்ன சிறப்பு...? அதாவது இயற்கைக்கு எந்த விதத்திலும் பங்கம் விளைவிக்காமல் கட்டப்பட வேண்டும் என்பதே இதன் சிறப்பு. கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்வது முதல் கட்டிமுடிக்கும் வரை பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதாவது கட்டடம் கட்டும் இடத்தில் மரம் இருந்தால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் கட்டடப் பணியை தொடங்க வேண்டும். ஒரு வேளை அந்த மரத்தை அங்கிருந்து அகற்றியே தீர வேண்டும் என்றால், மரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அப்படியே எடுத்து வேறு இடத்தில் நடவேண்டும்.

கட்டடம் கட்டும்போது ஏற்படும் இடிபாடுகளை அந்த வளாகத்திற்குள்ளேயே பயன்படுத்த வேண்டும். இதனால் சுற்றுசூழல் பாதுகாக்கப்படுவதுடன் வீண் விவகாரங்கள் தவிர்க்கப்படும். கட்டத்திற்குள் பகல் நேரங்களில் மின் விளக்கு பயன்படுத்தாமல் இயற்கையான வெளிச்சம் கிடைக்கும் வகையில் அறைகள் அமைக்கப்பட வேண்டும்.

அறையில் குளிரூட்டும் எந்திரம் பொறுத்தும்போது அந்த எந்திரம் உள்வாங்கும் சுத்தமான காற்றின் தன்மை அறியும் கண்காணிப்பு கருவி அமைக்க வேண்டும். குளியலறை மற்றும் கழிவறைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீரை மீண்டும் பயன்படுத்தும் வகையில் சுத்திகரிப்பு வசதி இருக்க வேண்டும்.

மேலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் சாதனங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல அமைப்புகள் கட்டடத்தில் இருக்க வேண்டும் என்று இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டட ஆணையம் கூறுகிறது.

இவ்வாறு கட்டடம் கட்டப்போவதாக எண்ணும் நபர்கள் கட்டடம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்தவுடன் ஹைதராபாதில் இயங்கும் அந்த ஆணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மூன்று வகை சான்றிதழ்கள்...: கட்டடம் கட்டுவதற்கு ஆரம்பிப்பதற்கு முன்பிருந்து கட்டி முடிக்கும் வரை இந்த ஆணையம் கட்டடங்களை சோதித்து சான்றிதழ் வழங்குகிறது. அதாவது 52 சதவீதம் அல்லது அதற்கு மேல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டிருந்தால் அதற்கு பிளாட்டினச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 39 முதல் 51 சதவீதம் இருந்தால் அதற்கு தங்கமும், 33 முதல் 38 சதவீதத்திற்கு வெள்ளி சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

எத்தனை கட்டடங்கள்...: சென்னையில் மட்டும் இப்போது 13 கட்டடங்கள் சுற்றுச்சூழல் பாதிக்காத கட்டடங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டடம் பிளாட்டினம் சான்றிதழும், 7 கட்டடங்கள் தங்கம் மற்றும் 5 கட்டடங்கள் வெள்ளி சான்றிதழ்களையும் பெற்றுள்ளன. தற்போது சென்னையில் அமைக்கப்பட்டு வரும் தலைமைச் செயலகக் கட்டடமும் இதை பின்பற்றிக் கட்டப்பட்டு வருகிறது.

விரைவில் புதிய சட்டம்...? சுற்றுச்சூழலை பாதிக்காத கட்டடம் கட்டுவதற்கான புதிய சட்டத்தை இயற்றுவதற்காக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று இந்தியப் பொறியாளர்கள் தொழில்நுட்பக் கழகத்தின் தமிழ்நாடு மாநிலப் பிரிவின் அமைப்பாளர் கே.பி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்