காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு தரைமட்டத் தொட்டி அமைக்க இடம் தேர்வு

Thursday, 23 May 2013 06:53 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print
தினமணி          23.05.2013

காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு  தரைமட்டத் தொட்டி அமைக்க இடம் தேர்வு


குடியாத்தம் நகரில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 23 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக சந்தப்பேட்டையில் உள்ள மாட்டுச் சந்தை வளாகத்தில் இடத்தை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் தேர்வு செய்தார்.

 குடியாத்தம் நகரின் குடிநீர்த் தேவைக்காக இத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 86.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இந்நிதியில் 23 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டி அமைத்து, அதிலிருந்து சந்தப்பேட்டையில் 4 லட்சம் லிட்டர், நகராட்சி ஆணையர் குடியிருப்பு வளாகத்தில் 3.80 லட்சம் லிட்டர், நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2.30 லட்சம் லிட்டர், போடிப்பேட்டையில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.

 இத்திட்டத்துக்கு பள்ளிகொண்டாவில் இருந்து குடிநீர் கொண்டு வரவும், நகருக்கு விநியோகிக்கவும் 22.81 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய பைப்லைன் அமைத்தல் மற்றும் பழைய பைப்லைன் புதுப்பித்தல் பணிகள் நடைபெறும்.

 தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்வதில் இழுபறி நிலை இருந்தது.

 இந்நிலையில் குடியாத்தத்துக்கு புதன்கிழமை வந்த மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர், நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகம், நகராட்சி ஆணையர் குடியிருப்பு வளாகம், மாட்டுச் சந்தை வளாகம் ஆகிய 3 இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இறுதியில் மாட்டுச் சந்தைத் திடலில் தொட்டி அமைக்க முடிவெடுத்தார்.

 இதற்கான பணிகள் ஒரு சில நாள்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜி. உமாமகேஸ்வரி, அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் சேவியர், உதவிப் பொறியாளர் துளசிராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.