அங்கீகாரம் இல்லாத 759 மனைப் பிரிவுகள்: ஆட்சியர்

Friday, 07 June 2013 06:52 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print
தினமணி         07.06.2013

அங்கீகாரம் இல்லாத 759 மனைப் பிரிவுகள்: ஆட்சியர்


மதுரை மாவட்டத்தில், அங்கீகாரம் இல்லாத 759 மனைப் பிரிவுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற மனைப் பிரிவுகளில் மனைகள் வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

 இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 நகர் ஊரமைப்பு சட்டம் 1971 மற்றும் தமிழ்நாடு ஊராட்சி கட்டட விதிகள் 1997 ஆகியவற்றின்படி, மதுரை உள்ளூர் திட்டக் குழுமப் பகுதிக்குள் அடங்கும் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிப் பகுதி ஆகியவற்றுக்கு மதுரை உள்ளூர் திட்டக் குழுமத்தால் மனைப் பிரிவுக்கான தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் திட்ட அனுமதி பெற்று, சம்பந்தப்பட்ட உள்ளாட்சியால் இறுதி ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர்தான், மனைப் பிரிவில் அமையும் மனைகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

 இந்த மனைப் பிரிவில் பூங்கா, விளையாடுமிடம், திறவிடம் 10 சதவீதமும், சாலை வசதிகளுக்கு 25 சதவீதமும், கடைக்கு 1 சதவீதமும் பொதுமக்களின் வசதிக்காக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், மதுரை மாவட்டத்தில் ஏராளமான மனைப் பிரிவுகளுக்கு அனுமதி பெறப்படவில்லை என புகார்கள் எழுந்தன.

 இதுதொடர்பாக கிராமப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில், அங்கீகாரம் இல்லாத 759 மனைப் பிரிவுகள் இருப்பது கண்டறியப்பட்டு,    அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகள், மேலூர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் ஏராளமான அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக விரிவான ஆய்வு நடைபெற்று வருகிறது.

  இதில், சில இடங்களில் உள்ளாட்சி அமைப்பினர் வரம்பை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளனர்.   பொதுவாக, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வணிகக் கட்டடமாக இருப்பின் 2,000-ம் சதுர அடிக்குள்ளும், குடியிருப்புக்கு 4,000 சதுர அடிக்குள்ளும் கட்டட வரைபட அனுமதி வழங்க அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த அமைப்புகள் மூலம் அந்த குறிப்பிட்ட மனைக்கான அனுமதியும் வழங்க முடியும்.

 ஆனால், மனைப் பிரிவுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகாரம் வழங்க முடியாது.  முழுமையான மனைப் பிரிவு வரைபடம் தயாரித்து உரிய நன்னிலை வரி, வளர்ச்சிக் கட்டணம் செலுத்தி உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தொழில்நுட்ப ஒப்புதலுடன் உறுப்பினர் செயலரால் திட்ட அனுமதி வழங்கப்படும். செயலாணை மற்றும் வரைபடங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

  பின்னர், உள்ளாட்சியில் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே, மனைகளை விற்பனை செய்ய வேண்டும். அப்படி, உள்ளாட்சி அமைப்புகளால் நேரடியாக வழங்கப்பட்டுள்ள மனைப் பிரிவுகள் அனுமதியற்றவையாகக் கருதப்படும். இந்த மனைகளை பதிவு செய்ய வேண்டாம் என பத்திரப் பதிவுத் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

 பொதுமக்களும் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மனைகள் வாங்க வேண்டாம்.

 இப்படிப்பட்ட மனை பிரிவுகளிலுள்ள மனைகளுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்வசதி போன்றவை ஏற்படுத்தி தர இயலாது. இந்த மனைகளுக்கு பட்டாவும் வழங்கப்பட மாட்டாது.

 அனுமதியற்ற மனைப்பிரிவுகள் குறித்து பொதுமக்கள், மாவட்ட ஆட்சியருக்குச்ஹஸ்ரீங்க்ஷர்ர்ந்:ஜ்ஜ்ஜ்.ச்ஹஸ்ரீங்க்ஷர்ர்ந்.ஸ்ரீர்ம்ஸ்ரீர்ப்ப்ங்ஸ்ரீற்ர்ழ்ஙஹக்ன்ழ்ஹண் என்ற முகவரியிலோ, மதுரை உள்ளூர் திட்டக் குழுமம், மதுரை மாநகராட்சி அலுவலக வளாகம், அண்ணா மாளிகை 3-ம் தளம், தல்லாகுளம், மதுரை-2, என்ற முகவரியிலோ, தொலைபேசியில் 0452-2530544 என்ற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம். உ.ம்ஹண்ப் ஐஈ: ம்ப்ல்ஹ ஸ்ரீற்ஸ்ரீல்ஹ்ஹட்ர்ர்.ண்ய் என்ற முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம், எனத் தெரிவித்தார்.