விதிமீறி கட்டப்படும் கட்டடங்களை கண்காணிக்க பிரத்யேக கமிட்டி : "காளான்' போன்று உயரும் காட்டேஜ்களால் வருவாய் இழப்பு

Thursday, 08 August 2013 10:48 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print
தினமலர்               08.08.2013

விதிமீறி கட்டப்படும் கட்டடங்களை கண்காணிக்க பிரத்யேக கமிட்டி : "காளான்' போன்று உயரும் காட்டேஜ்களால் வருவாய் இழப்பு


ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், விதிமீறி கட்டப்படும், முறை தவறி பயன்படுத்தப்படும் கட்டடங்களை கண்காணிக்க, பிரத்யேக கமிட்டி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளை தொடர்ந்து, ஊராட்சிப் பகுதிகளிலும் விதிமீறிய கட்டடங்கள் அதிகளவில் கட்டப்படுகின்றன.

ஊராட்சிப் பகுதிகளில், 1,500 ச.அடிக்கு மேல் கட்டடம் கட்ட அனுமதியில்லாத நிலையில், பிரம்மாண்ட காட்டேஜ், ரிசார்ட் கட்ட அனுமதியில்லை. பலர், "தாங்கள் கட்டும் கட்டடங்களுக்கு குடியிருப்புகளுக்கான அனுமதியை பெற்று, அவற்றை காட்டேஜ், ரிசார்ட்டு' என, வணிக ரீதியாக பயன்படுத்துகின்றனர்.அத்தகைய காட்டேஜ், ரிசார்ட்டு உரிமையாளர்கள், குடியிருப்பு பயன்பாட்டுக்குரிய தண்ணீர், மின் கட்டணத்தை மட்டுமே செலுத்துகின்றனர்; வணிக வரித்துறையினருக்கு செலுத்த வேண்டிய வரியையும் செலுத்துவதில்லை. இதனால், ஊராட்சி நிர்வாகம், மின்வாரியம், வணிக வரித்துறைக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்த ஆய்வு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.இத்தகைய கட்டட விவகாரம் குறித்த கூட்டம், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மல்ராஜ் முன்னிலையில் நேற்று நடந்தது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.

"சீல்' நடவடிக்கைமாவட்ட வருவாய் அலுவலர் நிர்மல்ராஜ் கூறியதாவது:

மஞ்சூர் கிண்ணக்கொரை, இரியசீகை, கோத்தகிரி கேத்ரின் நீர் வீழ்ச்சி, குஞ்சபனை, கல்லட்டி, மசினகுடி, அதிகரட்டி உட்பட ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில், 60 ரிசார்ட், காட்டேஜ்கள் முறை தவறி பயன்படுத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இத்தகைய கட்டடங்களால் ஊராட்சி, மின்வாரியம், வணிகவரித் துறைக்கு ஏற்படும் இழப்பை கண்டறிந்து, அதன் பயன்பாட்டு முறையை மாற்றியமைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது; இப்பணியை கண் காணிக்க, சம்மந்தப்பட்ட உள் ளாட்சி பிரதிநிகள் மற்றும் துறை அதிகாரிகளை உள்ளடக் கிய கமிட்டி அமைக்கப்பட உள்ளது.தவிர, நகராட்சிகளை பொறுத்தவரை, கோர்ட் வழக்கில் ஏற்கனவே உள்ள கட்டடங்களை தவிர, குன்னூரில் 17, ஊட்டியில் 12, கூடலூரில் 2 கட்டடங்கள், சமீப காலங்களில் விதிமீறி கட்டப்பட்டுள்ளதும், தெரிய வந்துள்ளது. இக்கட்டட உரிமையாளர்கள் தங்களது வீதிமீறல்களை சரி செய்து கொள்ள 30 நாள் கால அவகாசம் வழங்கியும், மீறினால், அக்கட்டடங்களை மூடி, சீல் வைக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, நிர்மல்ராஜ் கூறினார்.