1989க்கு பின் உருவான மனைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்! வீடு கட்ட திட்டமிட்டவர்கள் அதிர்ச்சி

Monday, 05 January 2015 07:24 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print

தினமலர்          05.01.2015

1989க்கு பின் உருவான மனைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்! வீடு கட்ட திட்டமிட்டவர்கள் அதிர்ச்சி


சென்னை பெருநகர் பகுதிகளில், கடந்த, 1989ம் ஆண்டுக்கு பின், பிரிக்கப்பட்ட மனைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் எழுந்துள்ள சிக்கலால், விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு கட்ட நினைப்பவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

சென்னை பெருநகர் பகுதியில், கடந்த, 1989, டிச., 31ம் தேதிக்கு முன், உருவான அங்கீகாரமற்ற மனைகள், மனை உட்பிரிவுகளை வரன்முறை செய்யும் திட்டத்தை, 1992ம் ஆண்டு சி.எம்.டி.ஏ., அறிவித்தது. அதன்படி, ஆயிரக்கணக்கான மனைகள் வரன்முறை செய்யப்பட்டன. முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு, பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு, புதிய மனைப்பிரிவுகளுக்கான அங்கீகாரங்களை, சி.எம்.டி.ஏ., வழங்கி வருகிறது.

குழப்பம் : ஆனால், பெரிய அளவில் அதிக பரப்பளவை கொண்ட புதிய மனைப்பிரிவு திட்டங்களுக்கு மட்டுமே, இத்தகைய அங்கீகாரம் கிடைக்கிறது. அதில், ஒரு குடும்பத்தில் தலைவருக்கு சொந்தமாக, இரண்டு அல்லது மூன்று கிரவுண்ட் நிலங்கள் இருந்து, அது அவர் காலத்துக்கு பின் வாரிசுகளால் பிரிக்கப்பட்டால், இத்தகைய பிரிப்புகள், முறையான மனைப்பிரிவாக அங்கீகாரம் பெற வேண்டும். ஒரு கிரவுண்ட் அளவுக்கான நிலத்துக்கு, அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இத்தகைய மனைகள் அங்கீகாரம் கோரி வந்தால், அதற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான, முறையான வழிகாட்டுதல்கள் இல்லாததால், குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக, இத்தகைய சிறிய மனைகளுக்கு, தனியாக அங்கீகாரம் கேட்டு விண்ணப்பங்கள் வந்தால், அந்த நிலம் தொடர்பாக, கடந்த, 1989ம் ஆண்டுக்கு முந்தைய, ஆவண பதிவை கணக்கில் எடுத்துக் கொண்டு, வரன்முறை திட்டத்தில் சேர்த்து விடுகின்றனர்.இதனால், தனிப்பட்ட மனைகளில் வீடு கட்டுவோருக்கு, கூடுதல் செலவு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

காரணம் என்ன?
பெயர் குறிப்பிட விரும்பாத, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: கடந்த, 1989ம் ஆண்டுக்கு பின், உருவான புதிய மனைகளை முறைப்படுத்துவதில் குழப்பம் நிலவுகிறது. அதற்கான முறையான விதிகள் இருப்பதாக, நகரமைப்பு துறையினர் கூறினாலும், உள்ளாட்சி அமைப்புகள் மத்தியில், நிலையில் இது விஷயத்தில் குழப்பம் நிலவுகிறது.எனவே, 1989ம் ஆண்டுக்கு பின் உருவான அனைத்து மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான திட்டத்தை, அரசு செயல்படுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.